Press "Enter" to skip to content

கமல்ஹாசனின் பிடிவாதத்தின் பின்னணி என்ன?- மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம்

கமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா? என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைமை நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை:

கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழையப்போகிறார் என்ற வதந்தி 2013-ம் ஆண்டு ‘விஸ்வரூபம்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்ட போதே பரவியது.

அப்போது பாரதிராஜாவிடம் கமல் அரசியலுக்குள் நுழைவது பற்றி கேட்டபோது அவர் சொன்ன பதில், “கமலுக்கு அரசியல் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் வந்தான் என்றால் முழுதாக கற்றுக்கொண்டு வருவான். தாங்கமாட்டீர்கள்…’ என்றார்.  அவர் சொன்னது இப்போது பலித்துக்கொண்டு இருக்கிறது.

கமலின் கோட்சே பற்றிய கருத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரதமர் வரை சென்றும்கூட பிடிவாதமாக தான் சொன்னதை மறுக்காமல் தீவிரம் காட்டி வருகிறார்.

நேற்று வெளியிட்ட காணொளிவிலும் கமலின் உறுதி தெரிகிறது. கமலின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறாரா? இன்னமும் அவரை தொடரும் பா.ஜனதாவின் பி டீம் என்ற சர்ச்சை… ஆகியவற்றை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிர்வாகிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:-

‘இவர்கள் சர்ச்சை ஆக்குகிற கருத்தை, தலைவர் கமல் பேசுவது இது முதல் முறை அல்ல. அதை பல தடவை பேசியிருக்கிறார். பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாகவும் இதைப் பேசினார்.

வழக்கமாக, பிரசாரத்துக்காகப் போகிற இடங்களில் உள்ளூர் பிரச்சனைகளை அவர் பேசுகிறார். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை ஆகியவை குறித்தும் வலியுறுத்திப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

அரவக்குறிச்சி பேச்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் வெட்டி எறிந்து விட்டு, ஒரு வார்த்தையை மட்டும் வைத்து சர்ச்சை ஆக்குகிறார்கள். வி‌ஷயத்தை வேண்டுமென்றே திசை திருப்பி, அபத்தமான அர்த்தம் கற்பிக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்த எங்கள் தலைவர், இதற்கு மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கமல் பின்வாங்கும் மனிதர் கிடையாது. அவர் பேசியது தமிழ்நாட்டில் விவாதிக்க கூடிய ஒரு வி‌ஷயம் தான். கோட்சேவை திட்டிவிட்டாரே என்ற கோபத்தை நேரடியாக காட்ட முடியாமல் இந்துக்களை சொல்லிவிட்டார் என்று இந்து பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.

எங்கள் கட்சியில் மதம் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. பொதுச்செயலாளர் குங்குமம் வைத்துக்கொண்டு சாமி கும்பிடுபவர் தான். கமல் தன்னுடைய கடவுள் மறுப்பு கொள்கையை எங்களிடம் கூட திணித்தது இல்லை. கமல் மாற்றத்துக்கான தலைவராக உருவாகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் இந்த சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.

கமல் கேட்கும் மற்ற கேள்விகளான குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட கேள்விகள் அவர்களை உறுத்துவதால் இதை பெரிதாக்குகிறார்கள். கமல் கோட்சே பற்றி பேசிய இடத்தில் தான் ஆற்றுமணல் கொள்ளை, தண்ணீர் பிரச்சனை, முருங்கைக்காய் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை என உள்ளூர் பிரச்சனைகளை பற்றியும் பேசினார். ஆனால் அவைகளை பற்றி யாரும் பேசவில்லை.

கமல் மீது வன்முறையை ஏவ தூண்டுபவர்கள் அந்தந்த கட்சியில் கண் துடைப்புக்காக கண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் அவர்கள் அந்த கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு வருவார்கள்.

பி டீம் என்பது எங்களால் பாதிக்கப்படும் இன்னொரு அணியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் எல்லோருக்குமே எதிரானவர்கள் தான் நாங்கள். அது இந்த சர்ச்சை மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

இதுவரை வேறு எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத துணிச்சலும் நேர்மையும் எங்கள் தலைவரிடம் இருக்கிறது. எனவே எங்கள் இலக்கு சட்டமன்ற தேர்தலும், கமலை முதல் அமைச்சர் பதவியில் அமர வைப்பதும் தான்.

விரைவில் தமிழக ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். கமல் எப்போதும் இதே மாதிரி தான் இருப்பார். ஆட்சியை காப்பாற்றுவதற்காக பூசி மெழுகவோ கண்ணை மூடி சிலரை ஆதரிப்பதோ செய்ய மாட்டார்.’

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.