Press "Enter" to skip to content

நாகை தனியார் மருத்துவமனையில் கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிந்த ஸ்கேன் மையத்துக்கு சீல்

நாகை: நாகையில் தனியார் மருத்துவமனையில் கருவில் இருக்கும் பாலினம் கண்டறிந்து சொன்ன ஸ்கேன் மையத்துக்கு சுகாதார அதிகாரி அதிரடியாக முத்திரை வைத்தார். நாகை பிடாரி அம்மன் கோயில் தெருவில் இயங்கி வரும் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணி பெண் இறந்தார். இதையடுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையில் தேசிய சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் பலர் திடீரென ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். அப்போது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் கருவி புதிதாக வாங்கி பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என கண்டறிதல் தடை சட்டத்தின்படி இந்த ஸ்கேன் கருவி பயன்படுத்தியது குற்றமாகும். மேலும் ஸ்கேன் கருவி பயன்படுத்தியது தொடர்பாக படிவங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்கேன் கருவி இருந்த அறையை பூட்டி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன் முத்திரை வைத்தார்.

பின்னர் சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மகேந்திரன் கூறியதாவது: கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு அதை வெளியில் கூறுவது சட்டப்படி குற்றமாகும். அதன்படி நாகையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இந்த கருவி பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தது. மேலும் அந்த ஆஸ்பத்திரியில் சில தவறுகள் நடப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் அந்த ஆஸ்பத்திரியில் திடீரென ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உரிய அனுமதி பெறாமல் புதிதாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறியும் கருவி பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கருவி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதுடன், அந்த கருவி இருந்த அறைக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.