Press "Enter" to skip to content

தேய்ந்தது தென்மேற்கு பருவமழை மதுரை, தேனி மாவட்டங்களில் முதல்போக நெல் சாகுபடி காலி

தேனி: தென்மேற்கு பருவமழை கை விட்டதால் தேனி, மதுரை மாவட்டங்களில் 59,718 ஏக்கர் நெல் வயல்களில் முதல்போக சாகுபடி காலியாகி விட்டது. இதனால் நிலங்கள் முழுவதும் சாகுபடி இன்றி தரிசாக கிடக்கிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 27ம் தேதி தொடங்கும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியை எட்டியதும் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். வழக்கமாக ஜூன் முதல் வாரமே தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் மூலம் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நெல் வயல்களிலும், மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரை 45,011 ஏக்கர் நெல் வயல்களிலும் முதல்போக சாகுபடி நடக்கும். ஜூன் மாதம் நடவு பணிகள் முடிந்து அக்டோபருக்குள் நெல் அறுவடை முடிந்து விடும். பின்னர் அக்டோபர் கடைசி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் இந்த நிலங்களில் இரண்டாம் போக நெல் சாகுபடி நடைபெறும்.இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை 48 நாள் தாமதமாகி உள்ளது. வழக்கமாக இந்த 48 நாட்களும் கடும் மழைப்பொழிவு இருக்கும். ஆனால் தற்போது வரை கேரளாவிலேயே வெயில் வாட்டுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் கேரளாவில் முதன்முறையாக மழையில்லாத ஜூன், ஜூலை மாதத்தை பார்த்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தேனி, மதுரை மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் கோடை காலத்திற்கு இணையாக உள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை இனிமேல் பெய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இனி மழை தொடங்கினாலும், அணை நீர் மட்டம் 120 அடியை எட்ட 10 நாள் வரை அவகாசம் தேவைப்படும். அதன் பின்னர் முதல்போக சாகுபடி செய்ய வாய்ப்பில்லை. தற்போதய பருவநிலை கணிப்புப்படி மழை தொடங்க இன்னும் பல நாட்கள் ஆகலாம். குடிநீருக்கே கேள்விக்குறி ஏற்பட்டுள்ள நிலையில் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என தேனி மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதனால் தேனி, மதுரை மாவட்டங்களில் இந்தாண்டு முதல்போக சாகுபடி காலியாகி விட்டது. மேலும் தற்போதைய காலக்கட்டத்தில் பால் பிடிக்கும் பருவத்தில் நெற்கதிர்கள் விளைந்து பசுமையாக காணப்பட வேண்டிய வயல்கள் முழுவதும் தரிசாக கிடப்பதால், விவசாயிகள் கண்ணீர் விடும் சூழ்நிலை நிலவுகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.