Press "Enter" to skip to content

தருவைகுளம் கடல் பகுதியில் மீன்பாடு அதிகரிப்பு

குளத்தூர்: குளத்தூரையடுத்த தருவைகுளம் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக சூறைக்காற்று அதிகமாக வீசிவந்ததால் தங்கு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள், மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். இதனால் ஏலக்கூடமும் மீன்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றின் வேகம் சற்று குறைந்தநிலையில் பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க துவங்கினர். கடந்த வாரங்களில் குறைவான மீன்களே சிக்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீன்பாடு சற்று அதிகரித்து காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதில் கெலவால, சூறை, வரிசூறை, உருளஞ்சூறை, சீலா, கருப்புகளிங்கன், பச்சைகளிங்கன், வாலமுறல், விலமீன், சவரான், திருக்கை போன்ற மீன்கள் வரத்து காணப்பட்டது. கெலவால, வரிசூறை அதிக வரத்து காணப்பட்டது. வரத்து அதிகரித்த போதிலும் மீன்கள் விலை கடந்த வாரம் சென்ற விலைக்கே விற்பனையானது. இதில் குறைந்த அளவே விற்பனைக்கு வைத்திருந்த சீலாமீன் கிலோ ரூ750வரை ஏலம்போனது. சூறை ரூ.70க்கும், கெலவால ரூ.150க்கும், முறல்வகை மீன்கள் ரூ.250லிருந்து ரூ.300வரைக்கும் விற்பனையானது.

இதுகுறித்து மீன்வியாபாரி பாக்கியராஜ் கூறுகையில், ‘கடந்த இரண்டு மாதங்களாக கடல் பகுதியில் பயங்கர சூறைக்காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதியில் தங்கு கடலுக்கு சென்ற பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் மீன்பாடு இல்லாமல் வெறுங்கையுடனே கரை திரும்பினர். தற்போது சூறைகாற்றின் வேகம் குறைந்து காணப்படுவதால் மீன்பாடுகளும் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மீன்கள் வரத்து சற்று அதிகரித்திருந்தாலும் மீன்கள் விலையில் மாற்றம் இல்லாமல் தான் விற்பனையாகிறது. வரும் நாட்களில் மீன்பாடுகள் மேலும் அதிகரித்தால் மீன்கள் விலை குறையக்கூடும்’ என தெரிவித்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.