Press "Enter" to skip to content

தமிழகத்தில் விரைவில் ஏர் உதவூர்தி சேவை : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கோவை: தமிழகத்தில் விரைவில் ஏர் உதவூர்தி சேவை ஏற்படுத்தப்படும் எனவும், இதற்காக ஆஸ்திரேலியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் உலக உடல் உறுப்புதான தினத்தை முன்னிட்டு, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ.,) யங் இந்தியன்ஸ் மற்றும் கோவை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலை நகரங்களில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையங்களை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில், மூளைச்சாவு அடைந்த 1,297 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதன் மூலம், 7,565 பேர் உறுப்புகள் பெற்று பயனடைந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை பிற மாநிலங்களிலும், பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு தரப்பில் கிடைக்கும். தொடர்ந்து நான்கு முறை உடல் உறுப்பு தானத்தில் முதல் இடத்தில் உள்ளோம். தமிழகத்தில் விரைவில், ஏர்-உதவூர்தி வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக, ஆஸ்திரேலியா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.  மேலும், சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு கைகளுக்கும் மாற்றுஅறுவை சிகிச்சை செய்து கொண்ட நாராயணசாமி என்ற ஏழை வாலிபருக்கு கோவை அரசு மருத்துவனையில் பணி வழங்க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

தொற்றுநோய் பாதிப்பு இல்லை: பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், மழையால் நீலகிரி மாவட்டத்தில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் காரணமாக உயிரிழப்பும் இல்லை. தேவைப்பட்டால் நீலகிரியில் நிரந்திர மருத்துவ முகாம் ஏற்படுத்தப்படும். மேலும், உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு காப்பீடு திட்டத்தில் 35 லட்சம் வரை அளிக்கப்படுகிறது” என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »