போக்குவரத்து விதிமீறல்களுக்கு குமரியில் இ-செல்லான் முறை அறிமுகம்: பற்றுமதி (டெபிட்), கிரடிட் அட்டைகள் மூலம் அபராதம் செலுத்தலாம்

நாகர்கோவில்: போக்குவரத்து விதிமீறலுக்கு பொதுமக்களிடம் இருந்து காவல்துறை சார்பில் நேரடியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் தவிர பிற விதிமீறல்களுக்கு போலீசாரிடமே அபராதம் செலுத்தலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஒருசிலர் மட்டுமே நீதிமன்றங்களில் அபராதம் செலுத்துகின்றனர். காவல் துறையினர் நேரடியாக பணம் வாங்கும் போது பல்வேறு பிரச்னைகள் எழுவதால் தமிழக காவல்துறையில் இ-செல்லான் முறையில் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இன்று முதல் இ-செல்லான் முறையில் அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது. நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை ஆகிய 4 காவல் துறை துணை சரகங்களில் உள்ள போக்குவரத்து காவல் பிரிவுகள் உள்பட 21 காவல் நிலையங்களில் இந்த இ-செல்லான் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக பற்றுமதி (டெபிட்), கிரடிட் அட்டைகள் மூலம் அபராத தொகை வசூலிக்க ஸ்வைப் இந்திர கருவிகள் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

இந்த ஸ்வைப் இயந்திரம் மூலம் இ-செல்லான் முறையில் எவ்வாறு அபராதம் வசூலிப்பது என்பது குறித்த பயிற்சி முகாம் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் இன்று நடந்தது. முகாமை எஸ்பி நாத் தொடங்கி வைத்தார். அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள், துணைஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதுகுறித்து எஸ்பி நாத் கூறுகையில், பொது மக்களுக்கும், ேபாலீசாருக்கும் இடையே நேரடி பண பரிமாற்றம் இருக்கக்கூடாது என்பதற்காக இ-செல்லான் முறை அமல்படுத்தப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்  தவிர 150 விதிமுறை மீறல்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை சம்பந்தப்பட்டவர் பண இயந்திரம், கடன், பற்றுமதி (டெபிட்) அட்டைகள் மூலம் செலுத்தலாம். அவ்வாறு அட்டைகள் இல்லாதவர்களுக்கு அபராதத்துக்கான செல்லான் வழங்கப்படும். இதை வைத்து ஸ்டேட் வங்கியின் காவல்துறை கணக்கில் அபராத தொகையை செலுத்தலாம். அபராத தொகையை வங்கியில் செலுத்தாவிடில் அவர்கள் குறித்த தகவல்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். வங்கி கணக்கில் பணம் செலுத்தாதவர்கள் பிடிபடும்போது முதல் 2 முறை எச்சரிக்கப்படுவார்கள். 3வது முறையாக பிடிபட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

இ-செல்லான் கருவியில் அபராதம் செலுத்தாதது குறித்த தகவல் கிடைத்துவிடும். இதில் ஒளிக்கருவி (கேமரா) வசதியும் உண்டு. காவல் துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு சைகை செய்யும்போது நிற்காமல் செல்பவர்களை போட்டோ எடுத்து, அந்த வாகன பதிவு எண் மூலம் சம்பந்தப்பட்டவர் செல்போனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும். வண்டி பதிவு எண்ணை இ-செல்லான் கருவியில் கொடுத்தால் உரிமையாளர் பெயர், வாகன ஓட்டுவிசை நம்பர் உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக ெபறலாம். மேலும் போலி காப்பீடு, ேபாலி லைசென்ஸ் போன்றவற்றையும் கண்டறிந்து விடலாம் என்றார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி விஜயபாஸ்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran