நாகர்கோவிலில் பரபரப்பு: அரசு விடுதியில் புழுவுடன் உணவு வினியோகம்….மாவட்ட ஆட்சியர் ஆபீசில் மாணவிகள் புகார்

நாகர்கோவில்: நாகர்கோவில் பால்பண்ணை ஜங்ஷனில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு மாணவிகளுக்கு தரமற்ற உணவு வினியோகிக்கப்படுவதாக தெரிகிறது. தட்டிக்கேட்ால் சம்பந்தப்பட்டவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விடுவார்களாம். வழக்கம் போல் இன்று காலையும் மாணவிகள் உணவு சாப்பிட்ட சென்றுள்ளனர். ஆனால் உணவு மிக மோசமாக இருந்துள்ளது. இதைடுத்து ஏராளமான மாணவிகள் தட்டுடன் உணவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். ஆபீசுக்குள் அனைத்து மாணவிகளும் செல்ல காவல் துறையினர் தடைவிதித்தனர். தொடர்ந்து சில மாணவிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் அரசு ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி பயின்று வருகிறோம். விடுதியில் 3 வேளை உணவு வழங்கப்படுகிறது.

உணவில் புழு பூச்சிகள் கிடக்கிறது. சாதம் கெட்டுபோன நிலையில் உள்ளது. இதுகுறித்து அலுவலக அதிகாரிகளிடம கூறினோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. புகார் கொடுத்த மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். மாணவிகள் மோசமான வழியில் செல்வதாகவும், விடுதியை விட்டு மாறுதல் செய்ய வேண்டும் என்றும் கூறி  வருகின்றனர். எனவே விடுதி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறியது: மொத்தம் 55 பேரும் விடுதியில் தங்கி உள்ளோம். காலை உணவையே இரவும் வழங்குகின்றனர். காய்கறி, அரிசி ஆகியவை முதல் நாள் போதிய அளவில் இருக்கும். அவற்றில் அரிசிைய விற்பனை செய்கின்றனர். காய்கறிகளை வீட்டிற்கு எடுத்து சென்று விடுகின்றனர். சாம்பாரில் ஒரு நாள் கூட காய்கறிகள் போடுவதில்லை.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் புகார் அளித்தோம். அவர் கண்டு கொள்வதில்லை. விடுதியில் உள்ள அனைத்து உணவு பொருட்களையும் அலுவலர்கள் வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். ஓசி சாப்பாடுதானே. பிறகு எதற்கு புகார் செய்கிறீர்கள் என்று விடுதி ஊழியர்கள் எங்களை கேட்கின்றனர். பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தோம் என்றனர்.

Source: Dinakaran