பொள்ளாச்சி அருகே சமத்துவபுரத்தில் தண்ணீர் பிரச்னை; கருப்புக்கொடி ஏற்றி மக்கள் போராட்டம்: காவல் துறையினர் சமரசம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்னையை போக்க கோரி அந்த பகுதி மக்கள் இன்று தங்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியை அடுத்த தென்சங்கம்பாளையத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிப்போரின் வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு இரு பாலருக்கும் தனித்தனியாக பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்வதில்லை. இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக சமத்துவபுரம் குடியிருப்பு பகுதிக்கும்  தென்சங்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும் பலனில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இந்த பகுதி பொதுமக்கள் இன்று அதிகாலையில் தங்கள் வீடு மற்றும் வீதிகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த கோட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.  ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்து தீர்வு காண்பதாகவும், குடிநீர் பிரச்னையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் காவல் துறையினர் உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள்  கருப்பு கொடிகளை அகற்றினர். அதிகாலை முதல் காலை 9 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த கருப்பு கொடி போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Dinakaran