ஈரோடு : வெளி மாநிலங்களில் தொடர் மழையினால் ஈரோடு மாட்டுச்சந்தைக்கு வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நேற்று குறைவாகவே வந்திருந்தனர். மேலும் மாடுகள் வரத்தும் குறைவாகவே இருந்ததால் மாடுகள் விற்பனையும் மந்தமாக இருந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் 250 பசுமாடுகளும், 200 எருமைகளும், 150 வளர்ப்பு கன்றுகளும் விற்பனைக்காக கொண்டு வந்தனர். பசுமாடுகள் 16 ஆயிரம் முதல் 32 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமைகள் 18 ஆயிரம் முதல் 36 ஆயிரம் ரூபாய் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் 2 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும் இருந்தது. மொத்தம் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையானது. கடந்த வாரத்தில் அந்தியூர் குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி அங்கு நடந்த கால்நடை சந்தைக்கு அதிகமாக மாடுகள் விற்பனைக்கு சென்றதால் இந்த சந்தையில் விற்பனை குறைவாக இருந்தது.
தற்போது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தொடர்ந்து அடைமழை (கனமழை) பெய்து வருவதால் நேற்று நடந்த சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். வியாபாரிகளின் வருகை குறைந்து போனதால் மாடுகள் வரத்தும் குறைவாகவே இருந்தது. வழக்கமாக 3.50 கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனை இருக்கும். ஆனால் நேற்று நடந்த சந்தையில் 80 சதவீத மாடுகள் 2 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையானது.
இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறுகையில், ‘‘வெளி மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாடுகள் வரத்தும் குறைவாகவே இருந்தது. மாடுகளை வாங்கி செல்வதற்காக திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். ஏற்கனவே கோவாவிற்கு மாடுகளை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனங்கள் மழையால் இன்னும் திரும்பவில்லை. இதேநிலை தான் மற்ற மாநிலங்களிலும் உள்ளது. இதனால் மாட்டுச்சந்தையில் வழக்கமான விற்பனையை விட குறைந்துள்ளது. மழை ஓய்ந்த பிறகு தான் விற்பனையும், மாடுகள் வரத்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,’’ எனத் தெரிவித்தார்.
Source: Dinakaran