Press "Enter" to skip to content

பவானி சாகர் அணையிலிருந்து நன்செய் பாசனத்திற்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்திற்காக முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் விசைகளை அழுத்தி மதகுகளை திறந்து வைத்தனர். ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை போதுமான அளவு பெய்யாததால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அடைமழை (கனமழை)யால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

இன்று காலை நிலவரப்படி 105 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 93.76 அடியாகவும் நீர் இருப்பு 24.1 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 13ம் தேதி தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு கீழ்பவானி பிரதான வாய்க்காலில் நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக வினாடிக்கு 2,300 கன அடி வரை அதிகரிக்கப்படும் எனவும், இன்று முதல் டிசம்பர் 11ம் தேதி வரை மொத்தம் 118 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகு, சென்னசமுத்திரம் கிளைவாய்க்கால் ஒற்றைப்படை மதகு பாசனப்பகுதிகளில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 3 மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »