Press "Enter" to skip to content

திருப்பூர் மாவட்டத்தில் கழிப்பிடம் கட்டித்தருவதில் ரூ.3 கோடி ஊழல்

*கிராமசபை கூட்டத்தில் புகார்

தாராபுரம் :  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அலங்கியம் கிராமம். இங்கு சுமார் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதிலும்,அடித்தட்டு மக்களுக்கு அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தியதிலும் சுமார் ரூ.3.60 கோடி ஊழல் நடந்துள்ளதாக கிராம சபை கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.  அலங்கியம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று கிராம சபை கூட்டம் சமூகநலத்துறை அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது, ஊராட்சி செயலாளர் சாந்தி அரசின் நலத்திட்டங்கள் பற்றியும், நடைமுறைப்படுத்தப்பட உள்ள திட்ட வரைவுகளையும் பொதுமக்கள் முன்னிலையில் வாசித்தார்.

 அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊராட்சி செயலாளர் அழகர் மற்றும் கட்சியினர் தனலட்சுமியிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:  கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019 வரை அலங்கியம் ஊராட்சி பகுதியில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயரில் அரசின் மானியத்துடன் கூடிய இலவச கழிப்பிடம் கட்டப்பட்டதாக கூறி கழிப்பிடம் ஒன்றுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் அரசின் மானிய தொகையை பயனாளிகள் கணக்கில் வரவு வைத்து, கட்டாத கழிப்பிடங்களை கட்டியதாக போலியான பெயர்களில் கணக்கு காட்டி ரூ.3 கோடியே 60 லட்சம் வரை ஊழல் நடந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறைப்படி புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இதேபோல் 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கே வராத பலருக்கும் சம்பளத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பின்னர் அதிகாரிகளின் உதவியாளர்களால் வங்கியிலிருந்து தொகை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராம சபை கூட்டம் பற்றிய தகவல் பொது மக்கள் பலருக்கு அறிவிக்கப்படவில்லை. கிராம சபை கூட்டத்தை நூறு நாள் வேலைத்திட்ட ஆட்களை வைத்து ஊராட்சி அலுவலகத்தின் வளாகத்திலேயே நடத்துவது முறைகேட்டை மூடிமறைக்கும் செயலாக உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு அதில் குடிநீர் வராவிட்டாலும் அதற்கான கட்டணம் மட்டும் கடந்த 3 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

எனவே அலங்கியம் ஊராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன் கிராமத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி இது குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் மனுதாரர் விபரம் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் கொடுக்கப்பட்ட புகார் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தார். இப்பிரச்சனையை தொடர்ந்து கிராம சபை கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கிராமசபை கூட்டத்தில் எழுப்பிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »