செப்.2021 க்குள் புதிய முனையம் கட்டுமான பணிகள் நிறைவடையும்

செப்.2021 க்குள் புதிய முனையம் கட்டுமான பணிகள் நிறைவடையும்

*திருச்சி விமான நிலைய இயக்குனர் தகவல்

விமான நிலையம் : செப்.2021 க்குள் புதிய முனையம் கட்டுமான பணிகள் நிறைவடையும் என திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. தேசியக்கொடியினை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஏற்றி வைத்து பேசுகையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களான விமான நிலையம், தொடர் வண்டிநிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பினை பலப்படுத்த கோரி அறிக்கை வழங்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு விமான நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படையினர் விழிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடந்தாண்டு (2018-19) திருச்சி விமான நிலையமானது ரூ.41.34 கோடி லாபம் ஈட்டித் தந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2019-20) கடந்த ஆண்டைவிட 10% வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். கடந்தாண்டு கார்கோ பிரிவில் 7 ஆயிரம் மெட்ரிக் டன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 8,000 மெட்ரிக் டன் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 ஆயிரம் கோடியில் 60 விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. அதிலும் திருச்சி விமான நிலையம் முதன்மை பெற வேண்டும். மேலும் புதிய முனையம் கட்டுமான பணி ஆனது 24% முடிவு பெற்றுள்ளது. 2021 செப்டம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பாதுகாப்பு படையினரின் கோரிக்கையான வாகனம் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கான அங்காடியை அமைத்து தருவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு படையின் துணை கமிஷனர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். முன்னதாக மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை, மோப்பநாய் பிரிவின் அணிவகுப்பு மரியாதையை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வாகனங்களில் வரும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கலைக்காவிரி நாட்டியப் பள்ளியின் சிறப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy