Press "Enter" to skip to content

சமூக விரோதிகளின் கூடாரமாகும் நாகை கிழக்கு கடற்கரை சாலை

*போலீசாரின் மெத்தனத்தால் தொடர் அவலம்

நாகை : நாகை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் மெத்தன போக்கால் நாளுக்கு நாள் சமூக விரோதிகளின் செயல் அதிகமாகி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாகை கிழக்கு கடற்கரை சாலை மிகவும் பிரதானமான சாலையாக அமைந்துள்ளது. கனரக வாகனங்கள் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அதேபோல் சுற்றுலா வரும் பயணிகள் நகர பகுதிக்குள் வர விரும்பாமல் நாகை புத்தூர் ரவுண்டானாவில் இருந்து வாஞ்சூர் ரவுண்டானா வழியாக எளிதாக காரைக்கால் செல்ல பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் புத்தூர் ரவுண்டானாவில் இருந்து எளிதாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணி சென்று விடுகின்றனர். இவ்வாறு இந்த கிழக்கு கடற்கரை சாலையின் பயன்பாடு வாகன ஓட்டிகளுக்கு மிகவும் அதிகளவில் பயன்படுகிறது. அதேபோல் வேளாங்கண்ணியில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர்களும் அதிகளவில் இந்த கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த கிழக்கு கடற்கரை சாலையில் தான் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி, தனியார் மெட்ரிக் பள்ளி என்று இருப்பதால் அதிகளவில் மாணவிகள் வந்து செல்கின்றனர். அப்படி வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தும் கிழக்கு கடற்கரை சாலையில் சமூக விரோதிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இரவு நேரங்களில் செல்லூரில் இருந்து பாலையூர் செல்லும் வரை உள்ள சாலையில் உள்ள சிமெண்ட் கட்டைகளில் சிலர் அமர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். அவ்வாறு மது அருந்திய பின்னர் குடும்பத்தோடு இரண்டு சக்கர வாகனத்தில் பாலையூர் அல்லது செல்லூர் செல்வோர்களை வழிமறித்து தகராறு செய்வது நீடிக்கிறது. சில நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்கின்றனர். இதற்கும் மேலாக அப்பகுதியில் ஒரு சில இடங்களில் பெண்களை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபடும் செயல்களும் நடப்பதால் அப்பகுதியில் இரவு 7 மணிக்கு மேல் பெண்கள் செல்வதற்கே அச்சம் அடைகின்றனர்.

குடும்பத்தோடு செல்லும் பெண்களையும் இதுபோன்ற தவறான வழியில் செல்லும் பெண்கள் என நினைத்து அங்கு சுற்றிதிரியும் சிலர் கிண்டல் செய்கின்றனர். அதேபோல் பகல் நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் மறைவாக உள்ள முட்புதர்களில் சமூகவிரோத செயல்களும் நடைபெறுகிறது. இதையும் தாண்டி சில சமூகவிரோதிகள் பாலையூர் முதல் செல்லூர் வரை செல்லும் சாலையில் உள்ள வேகத்தடைகளில் இரும்பு ஆனிகளை போட்டுவிடுகின்றனர். இரவு நேரங்களில் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனத்தில் வருவோர்கள் அந்த ஆனியில் பட்டு டயர் பஞ்சராகி விடுவதால் அந்த சாலையில் நிற்கும் போது திடீரென சமூக விரோத கும்பல்கள் வந்து வழிப்பறி செய்வதும், பெண்களை தவறான செயலுக்கும் உட்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொன்னால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும் என்ற எண்ணத்தில் எதையும் சொல்லாமல் சென்றுவிடுகின்றனர். இதற்கு எல்லாம் காரணம் போலீசாரின் மெத்தபோக்கு தான் என்று பாதிக்கப்படுவோர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவல் துறையினர் இரவு நேரங்களில் ஈடுபடுவது இல்லை. ஏதோ பெயரளவிற்கு ரோந்து காவல் துறையினர் வந்து அருகில் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கிவிடுகின்றனர். அதேபோல் இந்த சாலை கட்டுப்பாட்டில் உள்ள வெளிப்பாளையம் காவல் துறையினர் எந்த நேரமும் ரோந்து மேற்கொள்வது இல்லை. இதற்கு காரணம் காவல் துறை ஸ்டேசன் இருக்கும் இடத்தில் இருந்து இந்த சாலைக்கு செல்வதற்குள் போதும், போதும் என்று ஆகிவிடுகிறது. அதிலும் இரவு நேரங்களில் எதற்காக அங்கு செல்ல வேண்டும். ஏதாவது தகவல் வந்தால் செல்வோம் என்று மெத்தனமாக இருந்து விடுகின்றனர்.

இந்த சாலையில் இரவு நேரங்களில் போக்குவரத்து அதிகம் உள்ளது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் வாகனங்கள், நாகூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர்கள் என்று அதிக அளவில் வாகனங்கள் செல்கிறது. ஆனால் போதுமான அளவிற்கு பாதுகாப்பு இல்லை. வாகனங்களை வழிமறித்து கிடைப்பதை பறித்து செல்லும் கும்பல் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் பெண்களை வைத்து விரும்பதகாத செயல்கள் நடக்கிறது.

எனவே இந்த சாலையை கண்காணிக்க தனியாகவே காவல் துறையினர் நியமிக்க வேண்டும். பகல் நேரங்களில் எந்த சாலைக்கு உட்பட்ட வெளிப்பாளையம், நாகூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தற்பொழுது புதிதாக எஸ்பியால் அறிமுகம் செய்தஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) ரோந்து காவல் துறையினர் நகர எல்லைக்குள் ரோந்து பணியில் ஈடுவடுவதை கைவிட்டு இதுபோல் நகரின் வெளிப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும். நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிராம மக்களுடன் ஒரு நட்புணர்வை வளர்க்க பொதுமக்கள் காவல் துறையினர் என்ற புதிய திட்டத்தை ஏற்படுத்தி அப்பகுதியில் நடைபெறும் சமூகவிரோத செயல்களை தெரிவிப்பதற்கான சமூக ஆர்வலர்களை நியமிக்க வேண்டும். இதுபோன்ற சில செயல்களை செய்தால் மட்டுமே இதுபோன்ற சமூகவிரோத செயல்களை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »