Press "Enter" to skip to content

குற்றாலத்தில் இதமான சூழல் சுற்றுலா பயணிகள் அலைமோதல்

தென்காசி, : குற்றாலத்தில் நேற்று மதியம் வரை வெயிலும், அதன் பிறகு சற்று இதமான சூழலும் நிலவியது. விடுமுறை நாள் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குற்றாலத்தில் இந்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பருவம் சற்று ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் பருவம் நன்றாக உள்ளது. அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் இருமுறை குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு தண்ணீர் அதிகமாக விழுந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலையில் லேசான மேகமூட்டத்துடன் மெல்லிய சாரல் பெய்தது. காலை 9 மணிக்கு பிறகு சாரல் இல்லை. மதியம் 3 மணி வரை வெயில் காணப்பட்டது. அதன் பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. லேசான மேகமூட்டமாக இருந்தது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றால அருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. நேற்று சுதந்திர தின விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே படையெடுத்த வண்ணம் இருந்தனர். ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து வந்திருந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.