Press "Enter" to skip to content

தோட்டத்தில் கன்றுடன் புகுந்தது காட்டுமாடு

*நத்தத்தில் பரபரப்பு

நத்தம் : நத்தம் தனியார் தோட்டத்தில் கன்றுடன் காட்டுமாடு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நத்தத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள கரந்தமலை பகுதியில் காட்டுமாடுகள் அதிகம் உள்ளன. தற்போது வறட்சி காரணமாக இவை உணவு, குடிநீர் தேடி மலையை விட்டு ஊருக்குள் வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை நத்தம் தாலுகா அலுவலகம் எதிரே எம்ஜிஆர் நகரையொட்டியுள்ள தனியார் தோட்டத்தில் கன்றுடன் ஒரு காட்டெருமை புகுந்து விட்டது. தகவலறிந்ததும் நத்தம் வனவர் சாமியப்பன் உள்ளிட்ட வனத்துறையினர் வந்து காட்டுமாடை விரட்ட முயற்சித்தனர்.

ஆனால் ஆட்களை கண்ட மிரண்ட காட்டுமாடு கன்றுடன் அங்குமிங்கும் ஓடியது. பின்னர் ஒருவழியாக சுமார் 1 மணிநேரத்திற்கு பின் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டுமாடை கன்றுடன் மலைப்பகுதி நோக்கி விரட்டி விட்டனர். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘தற்போது நிலவும் கடுமையான வறட்சியால் வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.
எனவே அவற்றின் உணவு, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப்பகுதிக்கு உள்ளேயே தண்ணீர் தொட்டி, புல்வெளிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »