Press "Enter" to skip to content

அகராத்தூரில் பள்ளி கட்டிடம் சேதமடைந்து வகுப்பறைக்குள் ஓடுகள் விழுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்

*புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் வலியுறுத்தல்

கும்பகோணம் : அகராத்தூரில் உள்ள பள்ளி கட்டிடம் சேதமடைந்து வகுப்பறைக்குள் ஓடுகள் விழுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அடுத்த அகராத்தூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்களது பிரதான தொழில் விவசாயமாகும். இவர்களது குழந்தைகள் படிக்க வேண்டுமானால் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள கும்பகோணத்துக்கு தான் வர வேண்டிய நிலை இருந்ததால் 50 ஆண்டுகளுக்கு முன் ஓட்டு கட்டிடத்தில் ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது.

 இது வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதால் கட்டிட சுவர்களில் விரிசல் விட்டு வந்தது. பின்னர் அதை கிராம மக்களே சீர் செய்தனர்.
மேலும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அங்கு படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. பள்ளி கட்டிடம் தரமானதாக இல்லாததால் ஓடுகள் சரிந்து வகுப்பறைக்குள் விழுந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று அகராத்தூரில் கிராமசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் பள்ளி கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள ஓடுகள் வகுப்பறைக்குள் விழுந்தது. பள்ளி நாட்களில் ஓடுகள் விழுந்திருந்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் காயமடைந்திருப்பர். எனவே அகராத்தூர் ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அகராத்தூரை சேர்ந்தவர் கூறுகையில், பள்ளி கட்டிடத்தின் இஸ்திரதன்மை இழந்து வருகிறது என பலமுறை மாவட்ட நிர்வாக்கிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்குள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்காக தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. ஆனால் அந்த பள்ளி தற்போது மாணவர்களின் உயிரை பறிக்கும் பள்ளியாக மாறி வருகிறது.

தற்போது பலத்த காற்று வீசி வருவதால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள ஓடுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் காற்றுடன் மழை பெய்தால் பள்ளி கட்டிடம் முழுவதும் சேதமாகி விடும். இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. மேற்கூரையில் உள்ள ஓடுகள் கீழே விழாமல் இருப்பதற்கு சில இடங்களில் மூங்கிலை வைத்து மூட்டு கொடுத்து வைத்துள்ளனர். பள்ளிக்கூடத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வந்தால் நிறுத்துவதற்கு டேப் இல்லை.

இதனால் தண்ணீர் வரும்போது அந்த தண்ணீ்ர் வெளியேறி அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதுபோல் பல நாட்களாக தேங்கி நிற்பதால் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் கூடாரமாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகராத்தூரில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.