Press "Enter" to skip to content

ஆவின் பால் விலை உயர்வுக்கு இல்லத்தரசிகள் எதிர்ப்பு

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.6 விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு இல்லத்தரசிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ‘ஒரேயடியாக ரூ.6 அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது’, என்று குமுறுகிறார்கள்.

சென்னை:

பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா பாதிக்காத வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தல்-போக்குவரத்து-அலுவலக செலவுகள் உயர்ந்துள்ள நிலையில் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

2014-ம் ஆண்டு கடைசியாக ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆவின் பால் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்றே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அரசு அறிவித்தாலும், பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக இல்லத்தரசிகள் பொங்கி எழுந்துள்ளனர்.

பால் விலை உயர்வு குறித்த இல்லத்தரசிகளின் கருத்து விவரம் வருமாறு:-

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆர்.உமா மகேஸ்வரி (44):

பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையேற்றம் எப்போதும் ஏற்புடையது ஆகாது. அதுவும் ஒரேயடியாக பாலின் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியது நியாயம் கிடையாது. இந்த விலையேற்றம் இத்துடன் முடியப்போவது கிடையாது. பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவினின் மற்ற தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும். எப்போதுமே நடுத்தர மக்களின் மனநிலையை மனதில் வைத்தே திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். அந்தவகையில் அரசின் இந்த நடவடிக்கையை நிச்சயம் ஏற்கமுடியாது. எப்போதுமே நஷ்டத்தை ஈடுகட்ட விலையேற்றம் எனும் முடிவை உடனடியாக எடுப்பதை அரசு கைவிட வேண்டும். ஆவின் பால் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்பப்பெற்று, நஷ்டத்தை ஈடுகட்ட மாற்றுவழியை அரசு கையாள வேண்டும்.

திருமங்கலத்தைச் சேர்ந்த பி.மேனகா (39):

கல்லெண்ணெய்-டீசல் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு எனும் வரிசையில் தற்போது ஆவின் பாலும் விலை உயர்ந்துள்ளது. ஊட்டச்சத்து உணவுப்பொருளான பாலில், நியாயப்படி விலை ஏற்றமே கூடாது. அதுவும் இப்படி ‘ஜெட்’ வேக விலையேற்றம் தலையை சுற்றுகிறது. மதுபானங்கள், சிகரெட்-புகையிலை உள்ளிட்ட பொருட்களின் விலையை ஏற்றலாம். ஆனால் அதை செய்யாமல் பாலின் விலையை ஏற்றி என்ன ஆகப்போகிறது? இதை அரசு திரும்பப்பெற பெறவேண்டும்.

மணலி மாத்தூரைச் சேர்ந்த யோகேஷ்வரி (வயது 36):

பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை. தரமான பால் வினியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான வினியோகம் என்பது அரசின் கடமை. அதற்காக அந்த சுமையை மக்கள் தலையில் போடுவது சரியல்ல.

தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை முறையாக செயல்படுத்தினாலே விற்பனை விலையை அதிகரிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்திதர முடியும். அதைவிடுத்து பாலின் விலையில் லிட்டருக்கு ரூ.6 உயர்த்துவது நியாயம் கிடையாது. நடுத்தரவாசிகள், வரவு செலவுத் திட்டம் போட்டு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு இது பெரிய பாதிப்பு. இதனால் நிச்சயம் மாத வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழுவது உறுதி. எனவே மக்கள் நலனை எண்ணி ஆவின் பால்விலை உயர்வை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்.

சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.தீபலட்சுமி (33):

தினந்தோறும் காலை எழுந்ததும் நமக்கு முதல் உணவு பால்தான். அதுவும் குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பாலின் தேவை அதிகமாகவே இருக்கும். அந்தவகையில் பாலின் விலையில் அரசு கைவைக்கவே கூடாது. அதிலும் இவ்வளவு பெரிய விலை ஏற்றம் என்பது யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

இனி பால் விலை உயர்வை சொல்லி டீக்கடைகளில் விலையை உயர்த்துவார்கள். பால் சார்ந்த பொருட்கள் விலை உயரும்.

இதனால் 4 பேர் கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தினருக்கு மாதம் ரூ.180 கூடுதல் சுமையாகும். இது நிச்சயம் வரவு செலவுத் திட்டத்தில் பாதிப்பை உருவாக்கும். எப்போதுமே உணவு பொருட்கள் மீதான விலையேற்றம் குடும்பத்துக்கு சுமையையே ஏற்படுத்தும். இதை அரசு பரிசீலனை செய்து நல்ல நடவடிக்கையை ஏற்க வேண்டும்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கீதா (62):

நல்ல திட்டங்களுக்காக அதுவும் மக்களை பாதிக்காத வகையிலான விலையேற்றம் ஏற்புடையது. அதற்காக ஒரேயடியாக விலையை உயர்த்துவது சரியல்ல.

ஏற்கனவே காய்கறி விலை உயர்வால் பலரது வீடுகளில் ‘வெரைட்டி ரைஸ்’ தான் உணவாக செய்யப்படுகிறது. இப்போது பால் விலை உயர்வால் தயிர்சாதமும் கேள்விக்குறி தான். எப்போதுமே சுமையை மக்கள் தலையில் திணிக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையது ஆகாது. இனி டீக்கடைகளில் டீ-காபி விலை ரூ.2 முதல் ரூ.4 வரை உயரும். இது நல்லதல்ல.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.