Press "Enter" to skip to content

பாபநாசம் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறப்பு: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திறந்து வைத்தார்

நெல்லை: பாபநாசம் அணையிலிருந்து வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திறந்து வைத்தார். வருகிற செப். 9ம்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம்தேதி தேர் சாகுபடிக்கு  தண்ணீர் திறந்து விடப்படுவது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் பல ஆண்டுகளாக பருவம் தப்பி தென்மேற்கு பருவமழை பெய்ததும், பாபநாசம் அணையில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்ததும், பாபநாசம் அணையிலிருந்து கார்பருவ சாகுபடிக்கு ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது நின்று போனது.

இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர் பருவ சாகுபடி கிட்டத்தட்ட பொய்த்துப் போய், பிசான பருவ சாகுபடி மட்டுமே நடந்து வந்தது. இந்த ஆண்டும் போதிய தண்ணீர் இல்லாமல் ஜூன் 1ம் தேதி பாபநாசம் அணை திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 3ம்தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து 109.40 அடியை எட்டியது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 58.90 அடியாக உயர்ந்தது.

இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வாடும் வாழை பயிர்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் வருகிற செப். 9ம்தேதி வரை பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணி அளவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பாபநாசம் அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் 20 நாட்களுக்கு இந்த தண்ணீர் விடப்படும். நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், ஞானதிரவியம், எம்எல்ஏ முருகையாபாண்டியன்,

முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசாமி, வி.கே.புரம் நகர அதிமுக செயலாளர் கண்ணன், அசோக், கந்தசாமி, அருண், பிராங்கிளின், ஆபிரகாம், பாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள் மணிமுத்தாறு ராமையா, கல்லிடைகுறிச்சி சங்கரநாராயணன் மற்றும் திமுகவைச் சேர்ந்த நகர செயலாளர் கணேசன், பீட்டர் சுவாமிநாதன், குட்டி கணேசன் மற்றும் தாமிரபரணி உட்கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளர் பழனிவேல், தங்கராஜ், உதவி பொறியாளர் மகேஸ்வரன், மின் உதவி செயற் பொறியாளர் வெங்கடாசலம், உதவி பொறியாளர் சண்முகராஜ், சீனிவாசன், உதவி இயக்குநர் பிச்சையா, அம்பை தாசில்தார் வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.