ஓசூர் வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வி

ஓசூர் வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வி

ஓசூர்: ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானையை பிடிக்கும் முயற்சி 2வது நாளாக தோல்வியடைந்துள்ளது. மருத்துவர்கள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்க வனத்துறை எடுத்த முயற்சி இன்றும் கைவிடப்பட்டது. வனத்துறையினர் ஒற்றை யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதியில் இருந்து, கடந்த மாதம் வெளியேறிய குரோபர் என்ற யானை, மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பி செல்லாமல், கிராமங்களை ஒட்டிய விவசாய நிலங்களில் முகாமிட்டது. சமீபத்தில் தமிழகம், கர்நாடக மாநில எல்லையில், பெண் உட்பட இருவரை தாக்கி கொன்றது. எனவே, மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதற்காக கோவை மாவட்டம், டாப்சிலிப் பகுதியில் இருந்து இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. கடந்த, 20ல், பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு குரோபர் யானை திரும்பியது. யானையை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்பதில் வனத்துறையினர் உறுதியாக இருந்தனர். ஆனால், மழை பெய்ததால் யானையை பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

இந்நிலையில், நேற்று காலை பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரோபர் யானை, கதிரேப்பள்ளி அருகே தைலத்தோப்பில் தஞ்சமடைந்தது. இதையறிந்த வனத்துறையினர், யானைக்கு மயக்க ஊசி செலுத்த ஏற்பாடு செய்து அங்கு சென்றனர். கும்கி யானைகளும் பிரத்யேக வாகனத்தில் அழைத்து வரப்பட்டன. 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து தைலதோப்பிற்குள் சென்றனர் மாலை, 5:00 மணிக்கு மோலாகியும் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியவில்லை. சில வாய்ப்புகள் கிடைத்த போதும், மருத்துவர்கள் குழு மயக்க ஊசி செலுத்துவதற்குள், யானை தப்பிச்சென்றது. இந்நிலையில் இன்று மயக்க ஊசி செலுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்., மாதம், சின்னாறு அருகே தனியாக முகாமிட்டிருந்த குரோபர் யானை, மூன்று பேரை தாக்கி கொன்றது. இதனால் மயக்க ஊசி செலுத்தி, அஞ்செட்டி – உரிகம் இடையே விட்டனர். அப்போது அதற்கு காலர் ஐ.டி பொருத்தவில்லை. இந்த முறை குரோபர் யானையை பிடித்து, காலர் ஐ.டி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy