வேலூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்களாக விடப்பட்ட டவுன் பேருந்துகள்

வேலூர்: வேலூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்களாக உள்ளூர் டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜையும், நேற்று விஜயதசமி பண்டிகையும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜைக்காக கடந்த சனிக்கிழமை தொடங்கி நேற்று வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக அமைந்ததால்  சென்னையில் தங்கி பணி புரியும் வேலூரை சேர்ந்தவர்கள், வெளியூர்களில் இருந்து வேலூர் வந்து பணிபுரிபவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இவர்களுக்காக நேற்று வேலூரில் இருந்தும், சென்னையில் இருந்தும் 100 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்பட்டன.

நேற்று விடுமுறை முடிந்ததால் அனைவரும் சென்னைக்கும், பிற ஊர்களுக்கும் திரும்பி செல்ல வேலூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.  தங்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது என்பதால் மகிழ்ச்சியுடன் பஸ்  நிலையம் வந்தவர்கள் சிறப்பு பஸ்களாக ஓட்டை உடைசல் உள்ளூர் டவுன் பேருந்துகள் இயக்கப்படுவதை பார்த்து வேதனையடைந்தனர். பெரும்பாலான பயணிகள் அந்த பேருந்துகளில் ஏறமறுத்து ரெகுலராக சென்னைக்கு இயக்கப்படும் புறநகர்  பஸ்களுக்காக காத்திருந்து ஏறிச் சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘ஏறத்தாழ 140 கி.மீ தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் ஓட்டை, உடைசலாக உள்ளூரில் ஓடிக் கொண்டிருக்கும் டவுன் பஸ்களை சிறப்பு பஸ் கட்டணத்துடன் போக்குவரத்துக்கழகம் இயக்குவது  வேதனைக்குரியது’ என்றனர்.

Source: Dinakaran