அரசு விளையாட்டு விடுதியில் அடிப்படை வசதி இல்லாததால் அவதி

அரசு விளையாட்டு விடுதியில் அடிப்படை வசதி இல்லாததால் அவதி

ஈரோடு : ஈரோட்டில் அரசு விளையாட்டு விடுதியில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதி கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக தங்குமிடம், சத்தான உணவுகள், சீருடை வழங்கப்படுகிறது.

மேலும், விடுதிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை, மாலை இருவேளையும் கால்பந்து, வாலிபால், ஹாக்கி, நீச்சல், தடகளம் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 14 வகையான விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், 1994ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தை தற்காலிக மாணவிகள் விடுதியாக திறந்து வைத்தார்.

ஆனால், 25 ஆண்டு கடந்த நிலையிலும் இதுவரை மாணவிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் கூறியதாவது: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நுழைவு வாயிலில் உள்ள விளையாட்டரங்கில், மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாணவியர் விடுதி ஒன்றாக இயங்கி வருகிறது. விடுதியில் தங்கி கால்பந்து, வாலிபால், நீச்சல், ஜிம்னாஸ்டிக், தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளில் 101 மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த கட்டிடம் விடுதிக்காக கட்டப்படாத கட்டடம் என்பதால், போதிய கழிப்பறை இல்லை. மொத்தமாகவே நான்கு கழிப்பறை, நான்கு குளியல் அறை மட்டுமே உள்ளது. விளையாட்டு பயிற்சி அதிகாலை 5.30 மணிக்கு துவங்கி காலை 7.30 மணிக்கு முடியும். பயிற்சி முடித்து வரும் 101 மாணவிகளும் குளித்து, உணவு சாப்பிட்டு விட்டு, 8.30 மணிக்குள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் உள்ளது. ஒரே சமயத்தில் 100 பேரும் நான்கு பாத்ரூமினை பயன்படுத்த முடியாததால் சில  மாணவிகள் தண்ணீர் தொட்டிக்கு அருகிலும், வாராண்டா குழாயிலும் குளித்து செல்கின்றனர். அதேபோல், உணவு கூடத்தில் போதிய இடவதியில்லை. 25 மாணவியர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும், மற்றவர்கள்,  நடைபாதையில் நின்றபடி சாப்பிட்டு செல்கின்றனர்.

விளையாட்டு மைதானத்தில், வேறு போட்டிகள் நடக்கும் போது விடுதி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படாது. அப்போது, விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் வெளி நபர்கள் விடுதி நுழைவு வாயில் வழியாகத்தான் கடந்து செல்வார்கள். இதனால், மாணவிகள் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. எனவே, விளையாட்டு துறையில் மாணவிகள் சிறந்து விளங்க, அனைத்து வசதியுடன் கூடிய நவீன விளையாட்டு விடுதி கட்டித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy