Press "Enter" to skip to content

கீழடிக்கு முந்தைய நாகரீகம் கண்டுபிடிப்பு: கீரமங்கலத்தில் அகழாய்வு நடத்தப்படுமா?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் அடுத்த மங்களநாடு-பாலகிருஷ்ணபுரம் ஆகிய கிராமங்களுக்கிடையே வில்லுணி  ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள அம்பலத்தான் மேடு என்ற இடத்தில்  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் தலைமையில், சமூக ஆர்வலர் மதியழகன், தொல்லியல் ஆய்வாளர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன், தலைமை ஆசிரியர் வீரசந்திரசேகரன், ஆசிரியர் இளையராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர்  ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆங்காங்கே கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் கிடந்தன. சுண்ணாம்பு கற்காரைகள் படிந்த இடங்களிலும், புதர்களின் அருகிலும் முதுமக்கள் தாழிகள் புதைந்து கிடந்தன. மேலும் அங்கு கிடந்த பானை ஓடுகளில் முக்கோண ஏணி வடிவத்திலான குறியீடுகளும் காணப்பட்டது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: வன்னி மரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த பகுதி போர் வீரர்களின் வாழ்விடமாகவும், போரில் மடிந்த வீரர்களின் நினைவிடங்களாகவும் இருந்திருக்க வேண்டும். மேலும் புதிர் திட்டைகளும் அமைந்திருக்கிறது. சுண்ணாம்பு படிமங்கள் காணப்படுகிறது. இதன் காலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பானை ஓடுகளில் உள்ள குறியீடுகள் கிரேக்கம், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக கிடைத்திருப்பதால் தமிழர்கள் உலகமெங்கும் வாழ்ந்த சமூகமாக இருந்திருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும், தமது செய்தியை யாருக்காவது தெரியப்படுத்த வேண்டும் என்ற சமூக வழிகாட்டுதலில், அக்காலத்தில் நடைமுறையில் இருந்த எழுத்துக்களை பயன்படுத்தி, பானை ஓடுகளில் எழுதி வைத்துள்ளதை நாம் கீறல்கள் என்கிறோம். இந்தக்குறியீடுகளில் குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த்திறமிக்கவர், புதைக்கப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பதாக கிரேக்கம் சார்ந்த தொல்லியலாளர்களின் கருத்தாக உள்ளது. இதனை உலகளாவிய மொழிக்குறியீடாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்த குறியீட்டு எழுத்துகள், எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதால், இந்த பானை ஓடுகள் 3,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். ஹாரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகத்திற்கு முற்பட்டவை. மன்னரையோ அல்லது போர் திறம் மிக்கவர்களையோ புதைத்த இடத்தில் வன்னிமரம் நட்டுவைப்பது மரபு. இங்கு அதிக அளவில்   தாழிகள் கிடைத்திருப்பதாலும், வன்னிமரங்கள் அதிகமாக இருந்ததாலும் இங்கு  அடிக்கடி போர் நடந்திருக்கலாம்.

போரில் பயன்படுத்தும் வில் போன்ற ஆயுதங்களை  வீரர்கள் வீட்டுக்கு  எடுத்து செல்ல மாட்டார்கள்.  இங்குள்ள வன்னிமரத்தில் தொங்கவிட்டு சென்று விடுவார்கள்.  போர் முடிந்த பிறகு தான் அந்த ஆயுதங்களை எடுத்து செல்வார்கள்.  எனவே தான் இந்த பகுதியில் ஓடிய ஆறு வில்வன்னிஆறு என்ற பெயர் பெற்றுள்ளது.இது குறித்து சங்க கால பாடல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மக்கள் வாழ்விடம் அமைந்திருக்கலாம். அங்கு ஆய்வு நடத்தினால் அந்த மக்களின்   மேம்பட்ட வாழ்க்கை  முறைகள் தெரியவரும். இந்த பகுதி மக்கள் கற்கோடாரிகளை பயன்படுத்தி உள்ளதை பார்க்கும்போது, இரும்பு கலாச்சாரத்திற்கு முந்தையது இந்த பகுதி  நாகரீகம் என அறிய முடிகிறது. இது கீழடி நாகரீகத்திற்கு முந்தையது. தொல்லியல் வரலாற்றில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே இந்த பகுதியிலும் தமிழக, இந்திய  தொல்லியல் துறை அகழாய்வு நடத்தினால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.