Press "Enter" to skip to content

சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்புக்கு பின்னர் அயோத்தி உள்பட நாடு முழுவதும் முழு அமைதி

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் அயோத்தி உள்பட நாடு முழுவதும் முழு அமைதி நிலவியது.

அயோத்தி:

அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தீர்ப்பை விமர்சனம் செய்யக் கூடாது, வெற்றி ஊர்வலமோ, துக்க அல்லது மவுன ஊர்வலமோ நடத்தக்கூடாது, சமூக ஊடகங்களில் சர்ச்சை கருத்துகள், கடவுள் படங்கள் பதிவிடக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்திலும், அயோத்தியிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அயோத்தியில் மட்டும் 400 தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அனுமன் கோவிலை தாண்டி சர்ச்சைக்குரிய பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆளில்லா குட்டி விமானம் மூலமும், கண்காணிப்பு ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) மூலமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியானபோது அயோத்தியில் உள்ள பல சாலைகள் வெறிச்சோடி பாலைவனம்போல் காட்சி அளித்தது. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். பெரும்பாலானோர் வீட்டில் தங்கள் தொலைக்காட்சியில் அயோத்தி தீர்ப்பு செய்தியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பு வெளியான பின்னரும் அயோத்தியில் முழு அமைதி நிலவியது. காலையில் மூடப்பட்டு இருந்த மார்க்கெட்கள் மதியம் திறக்கப்பட்டன. 2-வது சனிக்கிழமை என்பதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ், தொடர் வண்டிகளில் குறைவான பயணிகளே இருந்தனர். சில பேருந்துகளில் பயணிகளே இல்லை.

கட்டுப்பாடுகளையும் மீறி சில இடங்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்கள் எழுப்பப்பட்டன. சில இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அயோத்தி தவிர குஜராத் மாநிலம் ஆமதாபாத், காஷ்மீர் ஆகிய இடங்களிலும் சில இடங்களில் பட்டாசு வெடித்தனர்.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் பகுதியில் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. சில கிலோமீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அயோத்தியில் தையல் கடை நடத்திவரும் முகமது சஜித், “தீர்ப்பு முழுமை அடையவில்லை” என்று மட்டும் கூறினார். விரிவாக கூற மறுத்துவிட்டார்.

அயோத்தியில் உள்ள அனுமன் கோவிலுக்கு தீர்ப்புக்கு பின்னர் பல பக்தர்கள் சென்று வழிபட்டனர். அவர்கள் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். பரத்சிங் என்பவர், ‘எனது கனவு நனவானதுபோல உணருகிறேன்’ என்றார். கோவிலுக்கு பெற்றோருடன் வந்த சில இளைஞர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பினார்கள். அவர்களது பெற்றோர் கோஷம் போடவேண்டாம் என்று கூறினர்.

கோவிலுக்கு வந்த ரமேஷ் தாஸ் என்பவர், 500 ஆண்டு அடிமைத்தனம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது என்றார். தான் ராம பக்தர் என்று கூறிய அவரை அனுமன் வேடம் அணிந்திருந்த ஒருவர் கட்டியணைத்து வாழ்த்தினார். அனுமன் கோவிலுக்கு வந்திருந்த மஹந்த் சஞ்சய் தாஸ் என்பவர் பட்டாசுகள் வெடித்தார்.

ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சில இளைஞர்கள் தீர்ப்பு பற்றி விமர்சனம் செய்துகொண்டிருந்தனர். ஜெய் ஸ்ரீராம் கோஷமும் எழுப்பினார்கள்.

தலைநகர் லக்னோவிலும் சிலர் பீதியுடன் காணப்பட்டனர். டீக்கடை நடத்திவரும் ராமு, “நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நான் கடையை திறந்து வியாபாரம் செய்தால்தான் வாழமுடியும். எந்த இடத்திலும் பிரச்சினை இல்லை என கருதுகிறேன்” என்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் தீர்ப்பையொட்டி சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை குருநானக் பிறந்ததினத்தை முன்னிட்டு விடுமுறை.

டி.ஜி.பி. ஓ.பி.சிங் கூறும்போது, “மாநிலம் முழுவதுமே அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. எந்த ஒரு புகாரும் இதுவரை வரவில்லை. சமூக ஊடகங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது” என்றார்.

உத்தரபிரதேச மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமைதியான சூழ்நிலை நிலவியது. எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.