Press "Enter" to skip to content

கோவை கல்லூரி மாணவர்களிடம் அதிகரிக்கும் கஞ்சா பழக்கம்: கண்டு கொள்ளாமல் கண்ணாமூச்சி காட்டும் காவல் அதிகாரிகள்

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. இதை, காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். கோவை மாநகரில் ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர்,  பீளமேடு, கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, ஈச்சனாரி, குறிச்சி, புறநகரில் மதுக்கரை, மேட்டுப்பாளையம், காரமடை, தென்னம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமீப காலமாக கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று  வருகிறது. இருபது கிராம் எடையுள்ள ஒரு பொட்டலம் கஞ்சா 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை, விற்கவும், வாங்கி உபயோகிக்கவும் ரெகுலர் கஸ்டர்கள் திரைமறைவில் உள்ளனர். தொழிலாளர் வர்க்கத்தில் இந்த  வாடிக்கையாளர்கள் அதிகளவில் உள்ளனர்.

ஆனால், அண்மைக்காலமாக இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை விரிவடைந்து, கல்லூரி மாணவர்கள் வரை கஞ்சா பழக்கம் சென்றுள்ளது. குறிப்பாக, அவினாசி ரோடு பீளமேடு, சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா  விற்கும் பழக்கமும், இதை மாணவர்கள் சுவாரஸ்யமாக புகைக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதை கண்காணிக்க உளவுப்பிரிவு ேபாலீசாரும், தடுக்க சட்டம்-ஒழுங்கு போலீசாரும் தவறிவிடுகின்றனர். கஞ்சா விற்பதை தடுக்கும் பணி  எங்களை சார்ந்தது அல்ல, அதற்கு போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தனியாக உள்ளனர் என உள்ளூர் காவல் துறையினர் அடிக்கடி கைவிரித்து விடுகின்றனர்.

இதன் காரணமாகவே, கஞ்சா விற்பனையும், புகைக்கும் பழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறை கஞ்சா புகைத்துவிட்டால், அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து விட்டது. பலர்  இதற்கு அடிமையாகி, மீள முடியாமல் தவிக்கின்றனர். 20 கிராம் எடையுள்ள ஒரு கஞ்சா பொட்டலத்தை நான்கு முதல் ஐந்து பங்காக பிரித்து, பீடி மற்றும் சிகரெட் ஓட்டையில் திணித்து மிக அற்புதமாக புகைக்கின்றனர். அன்றாடம் வீடுகளில்  இருந்து கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்களைவிட, வெளியில் தனியார் விடுதிகளில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களிடம் இந்த பழக்கம் அதிகளவில் உள்ளது. சில மாணவிகளும் இப்பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது. இம்மாணவர்களின் நடவடிக்கைைய கண்காணிக்க கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தவறிவிடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி, கோவை மாவட்டம் வால்பாறை, தேனி மாவட்டம் வருஷநாடு, உசிலம்பட்டி பகுதிகளில் அதிகளவில் நடக்கிறது. இங்கிருந்து மூட்டை, மூட்டையாக மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தேனி  பகுதியில் இருந்து கோவைக்கு அரசு பேருந்துகளில் சர்வ சாதாரணமாக அனுப்பி வைக்கப்படுகிறது. கோவை புறநகரில் ரகசிய குடோன்களில் பதுக்கப்பட்டு, அங்கு பொட்டலம் போடப்பட்டு, சிறு, சிறு சில்லரை வியாபாரிகளுக்கு விநியோகம்  செய்யப்படுகிறது. அவர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று, முக்கிய சந்திப்புகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். கோவையில் இருந்து கேரளாவுக்கும் கஞ்சா மூட்டைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
கஞ்சா புகைக்கும் பழக்கம் உள்ள கோவை கல்லூரி மாணவர்கள் சிலர், வாட்ஸ் அப்பில் இதற்காக தனி குரூப் ஆரம்பித்துள்ளனர்.

 ‘’கஞ்சா வேண்டுவோர் தங்களது தேவையை இக்குரூப்பில் பதிவிடலாம்’’ என அன்றாடம் தகவல் அப்டேட் செய்யப்படுகிறது. இக்குரூப்பில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். ஒரு கிலோ கஞ்சா 6 ஆயிரம்  ரூபாய்க்கு வாங்கி, அவற்றை தனித்தனியாக பங்கு போட்டுக்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள்தான் அதிகளவில் இப்படி பங்கு போட்டு உபயோகிப்பதாக சில்லரை வியாபாரிகள்  கூறுகின்றனர். கோவை உக்கடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் தேனியில் இருந்துஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் கஞ்சாவை கோவைக்கு அடிக்கடி கொண்டு வந்து விற்பனை  செய்தது தெரியவந்தது. இதேபோல், கார்களிலும் கஞ்சா கடத்தி, விற்பனை செய்கின்றனர்.

கஞ்சா மொத்த வியாபாரிகள், அந்தந்த பகுதி காவல் துறையினருக்கு தாராளமாக மாமூல் கொடுப்பதால், காவல் துறையினர் கஞ்சா விற்பனையை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாகவே, கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
கோவை மாநகர காவல் துறையில் சப்-ஆய்வாளராக பணிக்கு சேர்ந்து, ஆய்வாளர், டிஎஸ்பி என பதவி உயர்வுபெற்று, தற்போது சேலத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியில் உள்ள ஒரு அதிகாரி, பெண் தாதா  ஒருவரை, கஞ்சா விற்கச்சொல்லி கட்டாயப்படுத்தி, மாதம்தோறும் மாமூல் பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண் கஞ்சா வியாபாரி இதுபற்றி மேலிடத்தில் புகார் அளிக்க, அந்த டிஎஸ்பி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இப்படி, போலீசாரே  கஞ்சா கும்பலை வளர்த்துவிடும் கொடுமை சப்தம் இல்லாமல் நடந்து வருகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீசிலும் இதுபோன்ற அதிகாரிகள் சிலர் உள்ளனர். அவர்கள் துணையுடன் கஞ்சா வியாபாரிகள் தொடர்ந்து கோலோச்சி  வருகின்றனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் கஞ்சா விற்கிறார்கள், எந்தெந்த கல்லூரி மாணவர்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி, கிடக்கிறார்கள் என காவல் துறையினருக்கு தெரியும். ஆனாலும்,  கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். காரணம், அவர்கள் போய்சேர வேண்டியது, சரியாக சேர்ந்துவிடுகிறது. குற்றவாளிகளிடமிருந்து காவல் துறையினருக்கு மாமூல் கைமாறுவது தாராளமாக நடக்கிறது. மாமூல் கொடுக்க யாரேனும் தவறினால் அவர்கள்  மீது மட்டும் வழக்கு போடுகிறார்கள், கஞ்சா பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டுகிறார்கள். கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளை ஜாமீனில் எடுக்க, வழக்கறிஞர்கள் மூலம் போலீசாரே உதவுகின்றனர். கஞ்சா விற்பனை விஷயத்தில்,  மறைக்கப்படும் வழக்குகள் ஏராளம் உள்ளன. கஞ்சா பிடியில் இருந்து கல்லூரி மாணவர்களை காக்க காவல் துறையினர் நடடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கஞ்சா விற்பனை மட்டுமின்றி, அனைத்துவித குற்ற வழக்குகளிலுமே போலீசாரின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்து கைதான பிரபல கொள்ளையன் முருகன், தனது வாக்குமூலத்தில் எஸ்.பி.க்கு  தேர் வாங்கி கொடுத்தேன், இன்ஸ்பெக்டருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தேன் என அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளான். இதுபோல்தான், கோவை உள்ளிட்ட எல்லா பகுதியிலும் நடக்கிறது. காவல் துறையினர் தங்களது நடவடிக்கையை  மாற்றிக்கொள்ளாத வரை, கஞ்சா விற்பனையை தடுக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவை தனியார் கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், ‘’கல்லூரி மாணவர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. சில கஞ்சா வியாபாரிகள், மாணவர்களுடன் தொடர்பில் இருப்பது  தெரியவந்துள்ளது. அவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தவறு செய்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். வெளியே தவறு செய்யும்போது அதை காவல் துறையினர்தான் கண்காணிக்க  வேண்டும்’’ என்றனர்.

கோவை மாநகர காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகரில் தினமும் இரண்டு அல்லது மூன்று கஞ்சா வழக்குகள் பதிவாகின்றன. கடந்த 3 மாதங்களில் 85-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60க்கும் மேற்பட்ட  குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகரில் கஞ்சா நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.