சபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா?

சபரிமலை தீர்ப்பு.. பாஜக, காங்கிரஸ் என்ன சொல்கிறது தெரியுமா?

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும், சென்று வழிபட அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர்.

இதையடுத்து அந்த தீர்ப்பு அமலுக்கு வந்துள்ள நிலையில், இதை எதிர்த்து சுமார் 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாஜக கருத்து

3 நீதிபதிகள் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இரு நீதிபதிகள் சீராய்வு மனுவை டிஸ்மிஸ் செய்யலாம் என்று தெரிவித்திருந்தனர். இருப்பினும் மனுதாரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த தீர்ப்பு பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர்கள் கும்மனம் ராஜசேகரன் கூறுகையில், சபரிமலை பாரம்பரியத்தை உச்சநீதிமன்றம் நிலை நிறுத்தியுள்ளது.

மாநில அரசுக்கு கோரிக்கை

இந்த தீர்ப்பின் மூலம் மாநில அரசு, மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்பது தெளிவாகியுள்ளது. இனிமேலும் இளம்பெண்களை சபரிமலை கோவிலுக்கு கொண்டு சென்று விடுவதற்கு மாநில அரசாங்கம் முயற்சி செய்யாது என்று நம்புகிறேன். இந்த தீர்ப்பின் மூலமாக இந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் குறைபாடுகள் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. எனவே 7 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளிக்கும் வரை கேரள அரசு இந்த விஷயத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் ஆதரவு

பெண்கள் ஆதரவு போராளியான திருப்தி தேசாய் இதுபற்றி கூறுகையில், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட சபரிமலை தொடர்பான தீர்ப்பு தொடர்ச்சியாக அமலில் இருக்கும் என்று நம்புகிறேன். 7 நீதிபதிகள் அமர்வு கூட பெண்கள் உரிமைக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்று தெரிவித்தார்.

சபரிமலை செல்ல முயற்சி

2018ஆம் ஆண்டு தீர்ப்புக்கு பிறகு திருப்தி தேசாய், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முற்பட்டார். ஆனால் அவர் அங்குள்ள பக்தர்கள் சிலரால் தடுத்து, நிறுத்தப்பட்டார். இந்த நிலையில், இன்று அவர் கூறுகையில், மறுபடியும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு நான் முயற்சி செய்வேன் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கருத்து

கேரள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவருமான, ரமேஷ் சென்னிதாலா இதுபற்றி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஒட்டித்தான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. பக்தர்களின் நம்பிக்கைக்கு உச்சநீதிமன்றம் மதிப்பு வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசு தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்று தெரிவித்தார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram