ராடு உடைந்ததால் நடுவழியில் நின்ற அரசுபஸ்: பயணிகள் கடும் அவதி

ராடு உடைந்ததால் நடுவழியில் நின்ற அரசுபஸ்: பயணிகள் கடும் அவதி

வேலூர்: வேலூரில் இருந்து ஆற்காடு சென்ற அரசு பேருந்தின் ராடு கட்டாகி நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலத்தின் கீழ் 700 பேருந்துகள், நகர, புறநகர் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதில் 70 சதவீதம் ஆயுட்காலம் முடிந்தும் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடுகின்றன. இந்நிலையில், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

காகிதபட்டறை அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்தின் ராடு உடைந்து நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அந்த வழித்தடத்தில் வந்த வேறு ஒரு அரசு பேருந்தில் பயணிகள் மாறி சென்றனர். மேலும், பழுதாகி நின்ற அரசு பஸ் ஆற்காடு பணிமனைக்கு சொந்தமான பஸ் என்பதால், ஆற்காடு பணிமனையில் இருந்து பழுதாகி நின்ற அரசு பஸ்சை பழுது பார்க்கும் உபகரணங்கள், வேறு ராடு ஆகியன அதற்கான வாகனத்தில் எடுத்து வரப்படாமல் பயணிகள் பஸ்சிலேயே எடுத்து வரப்பட்டது பயணிகளை வேதனையில் ஆழ்த்தியது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy