குழந்தைகள் பாதுகாப்பு வலியுறுத்தி மிதிவண்டி பயணம்: தூத்துக்குடியில் வாலிபருக்கு வரவேற்பு

குழந்தைகள் பாதுகாப்பு வலியுறுத்தி மிதிவண்டி பயணம்: தூத்துக்குடியில் வாலிபருக்கு வரவேற்பு

தூத்துக்குடி: குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வரும் திருப்பத்தூர் வாலிபருக்கு தூத்துக்குடியில் வரவேற்பளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள சவுடுகுப்பத்தை சேர்ந்தவர் சுந்தர்சுப்பிரமணியன்(26). பிளம்பரான இவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த நவம்பர் 2ம்தேதி முதல் தனது விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தை துவக்கியுள்ளார். இந்தியாவின் 4 முக்கிய எல்லை பகுதிகளுக்கும் சென்று 13,500 கிமீ தொலைவு பயணம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்.

இவர் கோவை ரோட்டராக்ட் அமைப்பு மூலம் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகிறார். திருப்பத்தூரில் துவங்கி பாலக்காடு, கோழிக்கோடு, கொச்சின், திருவனந்தபுரம், குமரி, திருச்செந்தூர் வழியாக நேற்று தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளியில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் நேற்று மாலை மதுரை புறப்பட்டு சென்றார். 150 நாள் பயணமாக துவங்கிய அவர் குஜராத், காஷ்மீர், மணிப்பூர் சென்று மீண்டும் தமிழகம் வந்து திருப்பத்தூரிலேயே நிறைவு செய்கிறார்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy