மண்டல-மகர விளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு.. புதிய மேல் சாந்தி தேர்வு

மண்டல-மகர விளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு.. புதிய மேல் சாந்தி தேர்வு

சபரிமலை: மண்டல-மகர விளக்கு பூஜைக்காக, புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. சீராய்வு மனு மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி சில நாட்களேயாகியுள்ள நிலையில், நடை திறக்கப்பட உள்ளதால், சபரிமலையில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

imageசிதம்பரம் வழக்கு வாதத்தை காப்பி பேஸ்ட் பண்ணாதீங்க.. சிவக்குமார் ஜாமீனை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

தீபாராதனை

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலை வகிக்க, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து தீபாராதனை நடத்த உள்ளார்.

இதையடுத்து, 18ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். அதன்பிறகு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் வைத்து, நடைபெறும். பின்னர் 18ம்படிக்கு கீழே காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளைய தினம் பிற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

பூஜைகள்

17ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்று புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பார்வை, கணபதி சடங்குத்தீ, தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அரிவராசனம்

மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகையை பொறுத்து நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்படும். இதன்பிறகு டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.

அனைத்து வயது பெண்கள்

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில், தொடர்ந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்காமல், 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றியுள்ளது. எனவே கடந்த வருடம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஏற்ப, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

பாதுகாப்பு

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வருபவர்களுக்கு வலதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் போல போராட்டம் நடத்த கூடும் என்பதால், சபரிமலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram