அதிகாரிகள் மீண்டும் அதிரடி: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்… இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து மூலகுளம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதான சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப்ரல் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை, மின்துறை மற்றும் காவல்துறை சேர்ந்து, குழுவாக ஆக்கிரமிப்புகளை கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 21ம் தேதி வரையிலும், ஜூன் 17ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், ஜூலை 31ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரையிலும் 3 கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் புதிதாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சாலை வாரியாக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்.

 ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமெனவும், தவறும்பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதுமட்டுமின்றி, அபராதம் மற்றும் நகராட்சி தொழில் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 14ம் தேதி (நேற்று) முதல் ஜனவரி 10ம் தேதி வரையிலும் எந்தெந்த இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற பட்டியலையும் அவர் வெளியிட்டிருந்தார்.
அதன்படி இன்று 100 அடி சாலை இந்திராகாந்தி சிலை ரவுண்டானா முதல் மூலகுளம் வரையிலும் விழுப்புரம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை, வருவாய்த்துறை,  உழவர்கரை நகராட்சி, காவல்துறை ஆகியவை இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

சாலையோரம் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள், மற்றும் அடுப்புகள் போனறவற்றை அகற்றி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். 4 பெட்டிக்களும் அகற்றப்பட்டன. இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இப்பணி மதியம் 1.30 மணி வரையில் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி கடலூர் ரோட்டில் மரப்பாலம் சந்திப்பில் இருந்து அரியாங்குப்பம் பாலம் வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது

Source: Dinakaran