அமைதி நிலவும் சபரிமலை.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இரண்டே நாளில் 70,000 பேர் பார்வை

அமைதி நிலவும் சபரிமலை.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இரண்டே நாளில் 70,000 பேர் பார்வை

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த வருடம் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த இரண்டு நாட்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி பார்வை செய்துள்ளனர்.

மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.

அன்று முதல் இரண்டு நாட்களுக்குள் பக்தர்கள் அதிக அளவுக்கு வருகை தந்துள்ளனர் என்கிறது புள்ளிவிபரம். இருப்பினும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள அளவுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோவில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி பார்வை செய்யலாம் என்று கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு மண்டல மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மகளிர் போராட்டக் குழுக்களை சேர்ந்த பெண்களும் அங்கு வருகை தந்த நிலையில் வலதுசாரி அமைப்பினர் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் தலையிடும் அளவிற்கு நிலைமை சென்றது. அதேநேரம் இம்முறை அதுபோன்ற ஒரு பதட்டமான சூழ்நிலை இந்த வருடம், இல்லை என்பதால் பக்தர்கள் கடந்த வருடத்தை காட்டிலும் அதிக அளவுக்கு வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சபரிமலை பக்தர் ஒருவர் கூறுகையில், கடந்த வருடம் போல இல்லாமல், இந்த வருடம் அமைதியான சூழ்நிலை நிலவுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம், என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு 65 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இருப்பினும் கடந்த முறை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த அடிப்படையில், அனைத்து வயது பெண்களும், தொடர்ந்து கோவிலுக்கு செல்லலாம். அதற்கு தடை விதிக்கப்படவில்லை. இருப்பினும் இதுபோல வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசின் அமைச்சர்கள் பலரும் தெரிவித்துள்ளதால் இந்த முறை இளம் வயது பெண்கள் வருகை மிக மிக குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram