அரசு பள்ளியை தத்தெடுத்தது புளியந்தோப்பு காவல் நிலையம்

அரசு பள்ளியை தத்தெடுத்தது புளியந்தோப்பு காவல் நிலையம்

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்துள்ளது. இதன் துவக்க விழா நேற்று அப்பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் இந்த பள்ளிக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு, பழுதடைந்த கழிவறைகளில் கதவுகள் மாற்றப்பட்டு, புதிய மேஜை, நாற்காலிகள் வாங்கி தரப்பட்டு பள்ளியை  முழுவதுமாக சுத்தம் செய்தனர். மேலும் பள்ளியில் பயிலும் 200 பேருக்கு காலணிகளையும், சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்வி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல வகையான மாணவர்களுக்கு பயன்படும் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த பள்ளியில் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் வாழும் மாணவர்கள் அதிகம் படிப்பதால் இந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதாக புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். நிகழ்ச்சியில், சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், இணை கமிஷனர் விஜயகுமாரி, துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, புளியந்தோப்பு உதவி கமிஷனர் விஜய் ஆனந்த், புளியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட காவல்துறையை சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy