ராமதாசுக்கு காய்ச்சல்… உடல்நலம் விசாரித்த முதலமைச்சர்

ராமதாசுக்கு காய்ச்சல்… உடல்நலம் விசாரித்த முதலமைச்சர்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்று ராமதாஸிடம் நலம் விசாரித்தார்.

மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரத்தை அப்போலோ மருத்துவர்களிடம் முதலமைச்சரும், அமைச்சரும் கேட்டறிந்தனர்.

உடல் அயர்வு

பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேற்று முன் தினம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தாமே ஒரு மருத்துவர் என்பதால் காய்ச்சலுக்கான மாத்திரைகளை உட்கொண்டு ஓய்வு எடுத்து பார்த்துள்ளார். ஆனாலும் காய்ச்சல் குறைந்தபாடில்லை, கூடவே சளித்தொந்தரவும் அவரை வாட்டியுள்ளது.

உள்நோயாளி

இதனால் நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற ராமதாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக ராமதாசுக்கு காய்ச்சல் குறைந்துள்ளதாம்.

நண்பகல் 1 மணி

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியே சொல்லப்படவில்லை. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்ததன் மூலம் ராமதாஸ் மருத்துவமனையில் இருப்பது தெரியவந்துள்ளது. நண்பகல் 1 மணியளவில் அப்போலோ சென்ற முதல்வரும், அமைச்சர் விஜயபாஸ்கரும் சுமார் 15 நிமிடங்கள் வரை சந்தித்து பேசினர்.

சாதாரண காய்ச்சல்

இது தொடர்பாக விளக்கம் அறிய பாமக தலைவர் கோ.க.மணியை தொடர்பு கொண்ட போது, அவர் சார்பாக நம்மிடம் பேசிய அவரது உதவியாளர், ஐயாவுக்கு சாதாரண காய்ச்சல் தான், இப்போது நன்றாக இருக்கிறார் எனக் கூறினார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram