அது என்ன ஏலியனா? சண்முக சுப்ரமணியன் அன்று கேட்ட ஒரு கேள்வி.. விக்ரம் லேண்டரின் புதிர் விலகியது!

அது என்ன ஏலியனா? சண்முக சுப்ரமணியன் அன்று கேட்ட ஒரு கேள்வி.. விக்ரம் லேண்டரின் புதிர் விலகியது!

சென்னை: நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை தமிழர் சண்முக சுப்ரமணியன் எப்படி கண்டுபிடித்தார் என்பது குறித்த முழு விபரங்கள் வெளியாகி உள்ளது. அவர் பல நாட்களாக இது தொடர்பாக புகைப்படங்களை தீவிரமாக வெளியிட்டு நாசாவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சரியாக மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கியது. நாசாவின் LROC விண்கல ஆய்வு கருவியின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது.

imageசந்திரயான் 2 விக்ரம் லேண்டர்- நாசாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு பொறியாளர் சண்முக சுப்பிரமணியன்

விக்ரம் லேண்டர்

இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியதே சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான். இவர் இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது ஒரு சுவாரசியமான நிகழ்வு ஆகும். சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் முன்பில் இருந்தே அது குறித்து நிறைய சுவாரசியமான டிவிட்களை செய்து இருக்கிறார்.

சந்திரயான் 2 எப்படி

டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், சந்திரயான் 2 குறித்து நிறைய டிவிட் செய்துள்ளார். அதன்பின் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின் அது தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்பி வந்தார். அப்போதுதான் நாசா அந்த புகைப்படத்தை வெளியிட்டது.

தேடி வந்தது

நாசாவின் LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் விக்ரம் லேண்டரை தேடி வந்தது. நிலவின் தென் துருவ பகுதிக்கு மேலே இருக்கும் போது இந்த LRO (Lunar Reconnaissance Orbiter) விண்கலம் ஒரு குறிப்பிட்ட பகுதியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. நாசா அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டது.

புகைப்படம் காரணம்

ஆனால் நாசா, அந்த புகைபடத்தில் எங்கும் விக்ரம் லேண்டர் தென்படுவதாக தெரிவிக்கவில்லை. அப்போதுதான் அதே புகைப்படத்தை பகிர்ந்து, இதை பார்க்க விக்ரம் லேண்டர் போல இருக்கிறது. Line 3531 மற்றும் Sample 22670 பகுதியில் தெரிகிறது. அதன் கால்கள் அங்கு இருப்பது போல தெரிகிறது என்று சண்முக சுப்ரமணியன் குறிப்பிட்டு இருந்தார்.

பதில் இல்லை

ஆனால் இதற்கு அப்போது நாசா பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சண்முக சுப்ரமணியன் மீண்டும் அந்த புகைப்படத்தை வெளியிட்டு, இந்த வித்தியாசமான பொருள் விக்ரம் லேண்டர் இல்லை என்றால் அது என்ன? அது என்ன ஏலியன் பொருளா என்று கேள்வி கேட்டார்.

மீண்டும் சொன்னார்

அதன்பின் மீண்டும் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தவர், மீண்டும் அதே புகைப்படத்தில் வட்டங்கள் போட்டு விளக்கினார். அதில் விக்ரம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் தள்ளி விழுந்துள்ளது என்று அவர் பாகம் காட்டி விளக்கினார்.

நாசாவிடம் கொடுத்தார்

பின் அவர் அந்த ஐடியாவை தனது புகைப்படங்கள் மூலம் நாசாவிற்கு விளக்கினார். இது தொடர்பாக தனக்கு தெரிந்த சில நாசா விஞ்ஞானிகளுக்கு அவர் மெயில் அனுப்பி இருக்கிறார்.

அங்குதான் இருக்கிறார்

அதன்பின் நாசா இவரின் க்ளூவை வைத்து மீண்டும் அதே புகைப்படங்களை ஆராய்ச்சி செய்துள்ளது. மீண்டும் அந்த பகுதியில் புதிய புகைப்படங்களை எடுத்து சோதனை செய்துள்ளது. கடைசியில் நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. சண்முக சுப்ரமணியன் சொன்ன இடத்தில்தான் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கி உள்ளது.

எப்படி கண்டுபிடித்தார்

விக்ரம் லேண்டர் பயணித்த பாதை மற்றும் அது மோதுவதற்கு முன் சென்ற இடம் ஆகியவற்றை வைத்து இவர் இந்த இடத்தை கண்டுபிடித்துள்ளார். அதன் வேகத்தை வைத்து அது எங்கே சென்று இருக்கலாம். நாசாவின் புகைப்படத்தில் தெரியும் வித்தியாசமான புள்ளிகள் இதை எல்லாம் வைத்து அவர் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram