Press "Enter" to skip to content

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் அடைமழை (கனமழை) காரணமாக வைகை ஆற்றுகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதை தொடர்ந்து வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 71 அடியாகும். இன்று அணையின் நீர் மட்டம் 66 அடியாக உயர்ந்ததை அடுத்து முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணையானது எப்பொழுது வேண்டுமானாலும் நிரம்ப வாய்ப்புள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி, மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நீர்மட்ட உயரம் 66 அடியாகும். விரைவில் மொத்த உயரமான 71 அடியில் 69 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி வைகை அணையில் இருந்து 69 அடி தண்ணீர் மட்டுமே தேக்கப்படுவது வழக்கம்.

அந்த அடிப்படையில் நாளை, நாளை மறுநாள் அணை முழுவதுமாக நிரம்ப வாய்ப்புள்ளது. அவ்வாறு அணை நிரம்பும் பட்சத்தில் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் அணையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து 3,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரசரடி, வள்ளிமலை, மேகமலை, வருசநாடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வைகை அணையில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »