Press "Enter" to skip to content

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும்: உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை சந்தித்த பின் முதல்வர் பேட்டி

கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்ரமணியனுக்கு சொந்தமான காலியிடத்தை சுற்றி 80 அடி நீளம், 22 அடி உயரத்திற்கு கருங்கல்லால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இருந்தது. இந்த சுவர் 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அந்த பகுதியில் அடைமழை (கனமழை) பெய்து கொண்டிருந்தது.

அப்போது மழையால் சேதமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் அப்படியே சரிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்தது. தகவலறிந்ததும் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரமாக போராடி, வீடுகளுக்குள் தூங்கிய நிலையில் பலியான 17 பேர் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.

முதல்வர் பேட்டி

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்றைய தினம் 18 செண்டி மீட்டர் மழை பெய்திருக்கிறது. அதன் காரணமாக நடூர் பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் மீது அருகாமையில் இருந்து மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் 17 பேர் இறந்தனர். தகவல் கிடைத்ததும் மீட்புப் பணியினர் விரைந்து செயல்பட்டனர். சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். 17 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் நிதியிலிருந்து ரூ.4 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன் அவர்களுக்கு புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும். அந்தப் பகுதியில் இன்னும் பல ஓட்டு வீடுகள் இருப்பதை கண்டோம். அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்படும். ஏற்கனவே பாதுகாப்பு இல்லாத சூழலில் வசிப்போருக்கு அரசு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »