பெ.நா.பாளையம்: கோவை அருகே இன்று காலை இரும்பு தடுப்புகளை உடைத்த யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. இதனால் ேகாவை- மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருந்து நேற்று நள்ளிரவு குட்டிகளுடன் வெளியேறிய 8 காட்டு யானைகள், கவுசிகா நதி வழியாக இடிகரை பகுதிக்கு சென்றன. பின்னர் அந்த யானைகள் வனப்பகுதிக்கு திரும்பின. இன்று காலை 7 மணி அளவில் மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த தெற்குபாளையம் பிரிவு வழியாக சாலையை இந்த யானைகள் கடந்து செல்ல இருப்பதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் கேஸ் நிறுவனம் பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையின் இரு பகுதியிலும் சுமார் அரைமணி நேரம் வாகனங்களை நிறுத்தினர். அப்போது அங்குசாலையை கடந்த யானைகள் கூட்டம், சாலையின் நடுவில் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்து சாலையை கடந்து கவுசிகா நதி வழியாக வனத்துக்குள் சென்றது. இதை தொடந்து மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. யானைகள் மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்ற போது பஸ் பயணிகள், பொதுமக்கள் அவற்றை செல்போனில் படம் பிடித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Source: Dinakaran