விவசாய நிலத்தில் புகுந்த முதலை: கிராம மக்கள் அச்சம்

விருத்தாசலம்:விருத்தாசலம் பகுதி விவசாய நிலத்தில் உலா வந்த முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அருகே கோபாலபுரம் கிராமத்தில் வண்ணாத்தி ஏரி  அமைந்துள்ளது. இந்த ஏரியின் மூலம் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஏரியில் முதலை இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல் துறையினர் மற்றும்  வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்த போது முதலை மாயமாகிவிட்டது.

இதையடுத்து அதனை கண்டறிந்து பிடிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் அச்சத்துடனேயே இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அப்பகுதியில் உள்ள  விவசாய நிலத்தில் முதலை படுத்திருந்தது. அப்போது அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், முதலையை பார்த்து அதிர்ச்சியடைந்து கிராம இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த முதலையை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுதொடர்பாக விருத்தாசலம் வனத்துறை மற்றும் கம்மாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து முதலையைமீட்டு சென்றனர்.

Source: Dinakaran