வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் 3,600 கேங்மேன் பணியிடங்களுக்கு 7வது நாளாக உடற்தகுதி தேர்வு

வேலூர்: வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள 3,600 கேங்மேன் பணியிடங்களுக்கு 7வது நாளாக இன்று உடற்தகுதி தேர்வு நடந்தது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) என்ற பதவிகளுக்கு  நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது. வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் 3,600 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு கடந்த 25ம் தேதி தொடங்கியது. முதலில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் தேர்வாளர்கள்  மின்கம்பத்தில் ஏறி மின்சாதனங்களை எப்படி கையாளுவது என்பது குறித்து தேர்வு நடந்தது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும்14ம்தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. தேர்வாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட நாள்  மற்றும் நேரத்தில் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் 200 பேர் வீதம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: Dinakaran