ஆக்ரோஷம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது ஆண்டாள் யானையால் பலியான பாகன் மனைவிக்கு அரசு வேலை: மாவட்ட வன அதிகாரி தகவல்

ஆக்ரோஷம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது ஆண்டாள் யானையால் பலியான பாகன் மனைவிக்கு அரசு வேலை: மாவட்ட வன அதிகாரி தகவல்

சேலம்: மதுரை அழகர்கோவில் யானை ஆண்டாள், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் குரும்பப்பட்டி பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பத்மினி என்ற ஊழியரை கொன்றது. அதன்பிறகும் ஆண்டாளிடம் உஷாராக இல்லாத காரணத்தால் நேற்று முன்தினம் பாகனின் உயிரையே ஆண்டாள் பதம் பார்த்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கால்நடை மருத்துவர் பிரகாஷை காப்பாற்ற முயன்ற பாகன் காளியப்பனை தும்பிக்கையால் தூக்கிப்போட்டு மிதித்துக் கொன்றது. யானைக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னரே சிதைந்து போன பாகன் காளியப்பன் உடலை மீட்டனர்.  பொள்ளாச்சி டாப்லிசிப்பில் இருந்து காளியப்பனின் மனைவி மற்றும் 4 குழந்தைகள் அங்கு வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு,காளியப்பனின் உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது சேலம் மாவட்ட வனஅலுவலர் பெரியசாமி, காளியப்பன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்,நிருபர்களிடம் கூறுகையில், `‘ஆண்டாள் யானைக்கு மதம் பிடிக்கவில்லை. பாகன் காளியப்பன் இறந்த துயர சம்பவம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்ததால்,எங்களால் எதுவும் செய்ய முடிய வில்லை.பாகன் காளியப்பன் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் 4 லட்சமும்,சேலம் மண்டல வனத்துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ரொக்கமாக 1 லட்சமும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.காளியப்பன் மனைவி சபரிக்கு அரசு துறையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’என்றார். பாகன் காளியப்பனுக்கு உதவியாளராக இருந்து ஆண்டாள் யானையை கவனித்து  வந்த பழனி நேற்று அதிகாலை சேலம் வந்தார். அவர், யானையிடம் பேசி ஆசுவாசப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். நேற்று மதியம்,ஆண்டாள் யானை இயல்பு நிலைக்கு திரும்பியது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy