17 பேர் உயிரிழப்புக்கு நீதி கோரி போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்துவதா? அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு நீதி கோரி போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்தியதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக பொது செயலாளர்): 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்  என்ற அதிர்ச்சி தரும் செய்தி நம் அனைவரையும் இடிகொண்டு தாக்குவதைப் போல  நிலைகுலையச் செய்துவிட்டது. இவர்களை பறிகொடுத்த குடும்ப உறவுகளின் கதறல்கள்  மனிதநேயம் கொண்டோரின் இதயங்களில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது. அந்தக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்க  வேண்டும். விபத்தில் உயிர் இழந்தோரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் அரசு  மருத்துவமனை முன்பாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது வன்மையான  கண்டனத்துக்குரியது.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தது மனவேதனை அளிக்கிறது. தமிழக அரசு மற்ற இடங்களிலும் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழந்த குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ.மாநில தலைவர்): மேட்டுப்பாளையத்தில் 17 பேர் அநியாயமாக தங்கள் இன்னுயிரை இழந்த சம்பவத்தில் நீதி கோரி போராடிய மக்கள் மீது காவல்துறை வன்முறையை பிரயோகித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அனைத்தையும் இழந்து தவித்து நிற்கும் மக்களுக்கு ஆதரவாக எந்த குரலும் எழக்கூடாது என்று நினைப்பது சர்வாதிகார அடக்கு முறையாகும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source: Dinakaran