மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காம்பவுண்ட் சுவர் இடிந்து, 17 பேர் பலியான இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மழை காரணமாக மேட்டுப்பாளையம் நடூர் காலனியில்  உள்ள 3 வீடுகள் மீது அருகில் இருந்த மதில் சுவர் விழுந்து, வீடுகள் தரைமட்டமானது.  இதில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் கிடைத்ததும் இடிபாடுகளில் கிடந்தவர்கள் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தடுப்பு சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த உயிரிழப்பு மிகப்பெரிய வேதனையை அளிக்கிறது. இறந்த 17 பேர் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. அத்துடன், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் என மொத்தம் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, அவர்களது தகுதியின் அடிப்படையில் அரசு  வேலை  வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில், பல வீடுகள் ஓட்டு வீடுகளாக இருப்பதை கண்டேன். இந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும். ஏற்கனவே, பவானி ஆற்றங்கரையோரம் வசித்து வந்த 300 குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்க அரசு முடிவு எடுத்து, தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள், ஆற்றங்கரையோரம் வசித்து வருபவர்கள், பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் வசித்து வருபவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

இந்த உயிரிழப்புக்கு காரணமான, காம்பவுண்ட் சுவர் கட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். காம்பவுண்ட் சுவர் பலம் இழந்துள்ளது என ஏற்கனவே புகார் கொடுத்தார்களா?, இல்லையா?, புகார் கொடுக்கும்போது எந்த அதிகாரிகள் இருந்தனர்? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.   ஆய்வின்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அவசர கதியில் நடந்த பணிகள்
மேட்டுப்பாளையம் அருேக நடூர் பகுதியில் சுவர் சரிந்து வீடுகள் மீது விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.  முதல்வர் வருகையையொட்டி நடூர் பகுதியின் சாலைகள் ஒரே நாளில்  சீரமைக்கப்பட்டது. குண்டும், குழியுமான இடங்களில் சிமென்ட் போட்டு  சரிசெய்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த குப்பை, செடி, கொடிகள்  அகற்றப்பட்டது. 40 ஆண்டுகளாக தூர்வாராத ஓடை தூர்வாரப்பட்டது. இந்த பணிகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டன. நடமாடும் சிறப்பு மருத்துவக்குழு அமைத்து  அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.

தலா 10 லட்சம் நிதி உதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நேற்று முன்தினம் (2ம் தேதி) அதிகாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் மூன்று வீடுகளின் மேல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், 17 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க நேற்று முன்தினமே உத்தரவிட்டிருந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாயும் சேர்த்து, தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், புதிய வீடுகளை கட்டித் தரவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சார் நிறுவனங்களில் வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

Source: Dinakaran