Press "Enter" to skip to content

உள்ளாட்சியில் மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்த வழக்கு: நிலுவையில் உள்ள வழக்கை மீண்டும் பட்டியலிட வழக்கறிஞர்கள் முறையீடு

மதுரை: உள்ளாட்சி தேர்தலில் மேயர் போன்ற பதவிகளுக்கான மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்று கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பாணையில் தமிழகத்தில் மேயர் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள், பேரூராட்சிமன்ற தலைவர்கள், நகராட்சிமன்ற தலைவர்களுக்கான தேர்தல் மறைமுக தேர்தலாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் நீலமேகம் மற்றும் மகாலட்சுமி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். அதாவது மறைமுக தேர்தல் என்பது சட்டவிரோதமானது. ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதற்கு எதிர்மாறாக தற்போது தமிழக அரசு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது சட்டவிரோதமானது. ஆகவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்று மனுதாரர் கேட்டு அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. அதில் 6ம் தேதி முதல் மனுதாக்கல் செய்யலாம் என்றும், தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனவரி 11ம் தேதி மறைமுக தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தற்போது வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்தனர். அதாவது தங்களது மனு நிலுவையில் உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் விரைவாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது. எனவே இந்த வழக்கை மீண்டும் நாளை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். மேலும் உச்சநீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்திலேயோ தன்னுடைய கோரிக்கையை போன்ற மனு ஏதும் நிலுவையில் இல்லை என்ற தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இந்த தகவல் அனைத்தும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை படித்த பின்பு பட்டியலிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »