Press "Enter" to skip to content

திருமயம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கோயில் சுவர்

திருமயம்: திருமயம் அருகே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ள கோயில் சுவரை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் சந்தைப்பேட்டை பகுதியில் கிருஷ்ணர் கோயில் உள்ளது. இந்த கோயிலை பாதுகாக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள சுமார் 10 அடி உயரமுள்ள மதில் சுவரில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வெடிப்பு பெரிதாகி தற்போது சுவர் மோசமான நிலையில் உள்ளது. இதனிடையே தற்போது கடியாபட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுவர் ஈரப்பதத்துடன் எப்ப வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்நிலையில் கோயில் சுவர் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையோரம் இருப்பதால் கோயில் சுவர் இடிந்து விழும் பட்சத்தில் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு இடிந்து விழும் நிலையில் உள்ள கோயில் சுவரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »