கடன் வழங்க மறுத்ததால் ஆத்திரம்: துப்பாக்கி, கத்தியுடன் கோவை கனரா வங்கிக்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

கடன் வழங்க மறுத்ததால் ஆத்திரம்: துப்பாக்கி, கத்தியுடன் கோவை கனரா வங்கிக்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

கோவை: கோவை மாவட்டம் சுங்கம் பகுதியில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பிற்பகல் ஒண்டிபுதூரை சேர்ந்த வெற்றிவேலன் என்பவர் ஏர்கன் மற்றும் சிறியளவிலான கத்தியை எடுத்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். நேராக மேலாளர் அறைக்கு சென்ற வெற்றிவேலன் அங்கு அமர்ந்திருந்த நபர் ஒருவரை சரமாரியாக தாக்க தொடங்கினார். கையில் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்தியால் வெற்றிவேலன் தாக்க அவரை வங்கி மேலாளர் சந்திரசேகர் தடுக்க முயன்றார். அப்போது சந்திரசேகருக்கும் அடி, உதை விழுந்தது. வங்கி மேலாளர் அறையில் அடிதடி நிகழ்வதை பார்த்து அங்கு வந்த ஊழியர்கள் சிலர் வெற்றிவேலனை தடுக்க முயன்றனர். ஆனால் அவர் கட்டுக்கடங்காமல் அவர்களையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து போட்டிகோஸ் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் சந்திரசேகர் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து, தாக்குதல் தொடர்பான கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்திய காவல் துறையினர் வெற்றிவேலனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணங்கள் தெரிய வந்தது. வாகனத்திற்கான ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வரும் வெற்றிவேலன் ஏற்கனவே ஆந்திரா வங்கியில் கடன் பெற்று அதனை சரிவர கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இடைத்தரகர் குணபாலன் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்து சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் கடன்  பெற விண்ணப்பித்திருக்கிறார். சிபில் ஸ்கோர் அடிப்படையில் வங்கி மேலாளர் சந்திரசேகர் வெற்றிவேலனுக்கு கடன் தர மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனை இடைத்தரகர் குணபாலன் வெற்றிவேலனுக்கு தெரிவிக்காமலும், பணத்தையும் திரும்ப கொடுக்காமலும் கடன் வாங்கி தருவதாக கூறி நீண்ட நாட்களாக அலைக்கழித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வங்கிக்கு சென்ற வெற்றிவேலன் தனக்கு கடன் கிடைக்காது என்பதை உணர்ந்து ஆத்திரத்தில் இடைத்தரகர் குணபாலனை தாக்கியுள்ளார். அதனை தடுக்க முயன்ற வங்கி மேலாளருக்கும் அடி விழுந்துள்ளது. இதையடுத்து, வெற்றிவேலன் பயன்படுத்திய ஏர்கன் மற்றும் கத்தி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy