ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்5 நிமிட வாசிப்புஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி …

ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்5 நிமிட வாசிப்புஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி …

ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை உயர்த்தவும், விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவது தொடா்பாக பஞ்சாப், மத்தியப் பிரதேசம், கேரளம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, தில்லி யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் நிதியமைச்சா்களும், பிரதிநிதிகளும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் கடந்த 4ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.

இவை குறித்து இன்று (டிசம்பர் 6) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய ஜிஎஸ்டி வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், நிதியமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரியை அதிமுக வரவேற்றதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், “ஆனால் ஜிஎஸ்டி சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9,270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அதிமுக அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை. பிறகு, 2019-20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் “ஜி.எஸ்.டி மற்றும் இழப்பீடு வகையில் சுமார் 5,909 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் உள்ளது” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அந்தத் தொகை பெறப்பட்டதா?ஜி.எஸ்.டி சட்டத்தால் மாநிலத்திற்கு இதுவரை ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு? அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு? நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

மேலும், “மற்ற மாநில நிதியமைச்சர்கள் நிர்மலா சீதாராமனை சந்திக்கச் சென்றபோது அவர்களுடனும் தமிழக அரசின் நிதியமைச்சர் செல்லவில்லை. ஒருவேளை மத்திய பாஜக அரசு தங்கள் மீது கோபம் கொண்டால் என்ன செய்வது என்ற பயமோ என்னவோ. எதற்கெடுத்தாலும் வழக்கமாக கடிதம் மட்டும் எழுதும் முதலமைச்சர் பழனிசாமியும் இது குறித்து மவுனமாகவே இருக்கிறார்” என்று சாடியுள்ள ஸ்டாலின்,

“ஜிஎஸ்டி சட்டத்தால் இதுவரை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு? வராமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அதிமுக ஆட்சியின் மோசமான நிதி மேலாண்மையால், 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாய் கடன் வலையில் சிக்கி, மூழ்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிதி நிலைமையில், “ஜி.எஸ்.டி இழப்பீட்டையும்” சுமையாக ஏற்றி வைத்து – கஜானாவை காலி செய்து விட்டுப் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், முதலமைச்சரும் – துணை முதலமைச்சரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்திருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

Source: Minambalam.com

Author Image
murugan