ஹைதராபாத் எதிர்ப்படுதல்  (என்கவுண்ட்டர்) போல…: உன்னாவ் பெண்ணின் தந்தை! …6 நிமிட வாசிப்புஹைதராபாத் எதிர்ப்படுதல்  (என்கவுண்ட்டர்) போல எனது மகளின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொல்ல வ…

ஹைதராபாத் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) போல…: உன்னாவ் பெண்ணின் தந்தை! …6 நிமிட வாசிப்புஹைதராபாத் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) போல எனது மகளின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொல்ல வ…

ஹைதராபாத் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) போல எனது மகளின் மரணத்துக்குக் காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்று உன்னாவ் பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதும், அவர்களை தீ வைத்து எரித்து கொல்வதும் சாதாரணமாகிவிட்டது. அண்மையில் ஹைதராபத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளாத நிலையில், உன்னாவில் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் டிசம்பர் 2018ல் 23 வயதான இளம் பெண் ஒருவர் கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கடந்த மார்ச் மாதம் அப்பெண் குற்றம்சாட்டிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த வியாழன் அன்று அப்பெண் வழக்குத் தொடர்பாக ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார். நீதிமன்றம் செல்வதற்காக, அன்று அதிகாலை 4 மணிக்கு தன் வீட்டுக்கு அருகில் உள்ள தொடர் வண்டிநிலையம் சென்ற அவரை வழிமறித்துக் குற்றம்சாட்டப்பட்ட சிவம், சுபம் அடங்கிய ஐந்து பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணின் கால் மற்றும் கழுத்தில் தாக்கி, அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் கொளுத்தியுள்ளனர். இந்நிலையில் சூடு தாங்க முடியாமல் அந்த பெண், எரிந்த நிலையில் சுமார் ஒரு கிமீ வரை ஓடி ஆள் நடமாட்டம் இருந்த பகுதிக்குச் சென்று உதவி கேட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அப்பெண்ணை மீட்டு லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 90 சதவிகிதம் தீ காயம் அடைந்திருந்த அந்த பெண் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது மருத்துவர்களிடம், தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் வாழ விரும்புவதாகவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். உயிர்காக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், குற்றவாளிக்ளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று உறுதியாக இருந்த அப்பெண், குற்றவாளிகள் பெயரைச் சொல்லி வாக்குமூலமும் அளித்துள்ளார்.

டிசம்பர் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சுயநினைவை இழந்துள்ளார். நேற்று இரவு 11.10 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை காப்பாற்றப் போராடியும் 11.40 மணியளவில் உயிரிழந்தார் என்று சப்தர்ஜங் மருத்துவமனையின் தீக்காயங்கள் மற்றும் நெகிழி (பிளாஸ்டிக்) பிரிவு மருத்துவர் ஷலப்குமார் தெரிவித்தார்.

இன்று காலை 9 மணியளவில் அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே, அவர் மீது கல்லெண்ணெய் ஊற்றி எரித்த விவகாரத்தில் தொடர்புடைய ஹரி ஷங்கர், திரிவேதி, ராம் கிஷோர் திரிவேதி, உமேஷ் பாஜ்பாய் , சிவம், சுபம் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால், குற்றவாளிகள் அனைவரையும் ஒரு மாதத்தில் தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

உன்னாவ் சம்பவம் உபியில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கிழக்கு உபி செயலாளர் பிரியங்கா காந்தி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநில அரசு உரியப் பாதுகாப்பை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

உன்னாவ் பெண்ணின் மரணம் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அப்பெண்ணின் தந்தை, அரசு மற்றும் அதிகாரிகளிடம் நான் எதிர்பார்ப்பது ஒன்றை மட்டும் தான், எனது மகள் உயிரிழக்கக் காரணமான குற்றவாளிகளை ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் போல் சுட்டுகொல்ல வேண்டும். இதைத்தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. அப்போதுதான் எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும். குற்றவாளிகள் எங்கள் குடும்பத்தையும் அச்சுறுத்தி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

உன்னாவ் நகரில் கடந்த 11 மாதங்களில் 86 பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தெரியவந்துள்ளது.

Source: Minambalam.com

Author Image
murugan