அடிப்படை வசதிகள் செய்து தராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு

அடிப்படை வசதிகள் செய்து தராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு

*துண்டு பிரசுரங்களால் பரபரப்பு

விருத்தாசலம் : விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், சுதாகர் நகர், ஆசிரியர் நகர் மற்றும் விவேகானந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி விருத்தாசலம் நகராட்சி மற்றும் குப்பநத்தம் ஊராட்சி ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கி உள்ளதால் இப்பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில், விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குப்பநத்தம் ஊராட்சி நிர்வாகம் போட்டி போட்டுக்கொண்டு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், தெருவிளக்கு அமைத்து தரக்கோரி தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் அதற்கும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், குப்பநத்தம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டியுள்ளனர். அதில், விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர், குப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கிடங்கு பின்புறம், சுதாகர் நகர், ஆசிரியர் நகர் மற்றும் விவேகானந்தர் நகர் உள்ளிட்ட பகுதியில் 20 ஆண்டுகளாக குடியிருந்தும், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை எங்கள் பகுதிக்கு ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் எவரும் வாக்கு கேட்டு வராதீர்கள். ஊராட்சி தேர்தலை புறக்கணிக்கின்றோம், என குறிப்பிடப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy