கள்ளிப்பாடி-காவனூர் இடையே கிடப்பில் கிடக்கும் தரைப்பாலம் அமைக்கும் திட்டம்

கள்ளிப்பாடி-காவனூர் இடையே கிடப்பில் கிடக்கும் தரைப்பாலம் அமைக்கும் திட்டம்

*13 கிராமமக்கள் கடும் அவதி

ஸ்ரீமுஷ்ணம் : கள்ளிப்பாடி-காவனூர் இடையே வெள்ளாற்றில் தரைப்பாலம் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், 13 கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, வெள்ளாற்றில் தரைப்பாலம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி-காவனூர் இடையே வெள்ளாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் காவனூர், மருங்கூர், கீரனூர், வல்லியம், சக்கரமங்களம், கார்மாங்குடி, மேலப்பாளையூர், தொழூர், கொடுமனூர், கீழப்பாளையூர், தேவங்குடி, பவழங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் அமைந்துள்ள 10 ஊராட்சிகள், கம்மாபுரம் ஒன்றியத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டு ஸ்ரீமுஷ்ணத்தை புதிய ஒன்றியமாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்து உள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் கள்ளிப்பாடி வெள்ளாற்றை கடந்துதான் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்கு மனுதாக்கல் செய்ய வரவேண்டும்.
ஆனால் தற்போது வெள்ளாற்றில் தண்ணீர் செல்வதால் இதன் வழியே வரமுடியாமல் பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கிராம மக்கள், மாணவ, மாணவிகள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடி ஆற்று நீரில் இறங்கி நடந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டிற்கு முன், காவனூர், கள்ளிப்பாடி இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்க இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, அரசு அறிவித்தபடி வெள்ளாற்றில் பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி, விரைந்து பாலம் அமைக்க உரிய நடவடிகை எடுக்க வேண்டும் என 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy