நெல் கதிரடிக்கும் களமாக மாறிய தேசிய நெடுஞ்சாலை

நெல் கதிரடிக்கும் களமாக மாறிய தேசிய நெடுஞ்சாலை

கிருஷ்ணகிரி :நெல் அறுவடை களம் இல்லாததால், கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் விவசாயிகள் நெல் கதிரடித்து பிரித்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீரை பயன்படுத்தி, பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாததால் கிணறு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் பூ, கீரைகளை பயிரிட்டு வந்தனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியது.  இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் பயிரிட்டனர்.

தற்போது மாவட்டத்தின் பல இடங்களில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அவதானப்பட்டியிலிருந்து காவேரிப்பட்டணம் வரை உள்ள விளைநிலங்கள் சாலையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தற்போது சாரல் மழை பெய்து வருவதால் வயல்களில் ஈரப்பதம் மிகுதியாக உள்ளது. இதனால், அறுவடை செய்த நெற்பயிரை களத்திற்கு எடுத்து சென்று நெல்லை தனியே பிரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, நெற்பயிரை காய்ந்த பகுதிக்கு கொண்டு செல்வதற்காக, நெல் கட்டுகளை  3 கி.மீ சுமந்து சென்று கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் நெல்லை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சாலையில், நிமிடத்திற்கு 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால், அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையை களமாக பயன்படுத்தி நெல்லை தனியே பிரித்து வருகின்றனர். இந்த சாலைகளில் நெல் கொட்டி வைத்து உலர வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி அப்பகுதியில் விளையும் நெல்லை களம் சேர்க்கும் வகையில் நெற்களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காமலும், போதிய வருமானமும் இல்லாததால் பல விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். அறுவடை செய்த நெல்லை தனியே பிரித்தெடுக்க கூட இப்பகுதியில் களம் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளை நிலங்கள் உள்ள பகுதிகளில் நெல் அடிக்கும் களம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy