நீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. எதிர்ப்படுதல்  (என்கவுண்ட்டர்) சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து

நீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து

ஜெய்ப்பூர்: நீதி என்பது பழிவாங்குவது அல்ல என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார். ஹைதராபாத் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் போப்டே பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நீதித்துறை சீர்திருத்தம், மரண தண்டனை மற்றும் விரைவான நீதி குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற புதியக் கட்டடத்தின் தொடக்க விழாவில் இன்று எஸ்.ஏ.போப்டே, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய போப்டே, வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டுவர நீதி அமைப்பில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் மத்தியஸ்தம் போன்ற மாற்று முறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளது.

நீதி என்பது பழிவாங்கும் (revenge) நடவடிக்கை கிடையாது. அப்படி பழிவாங்குவதுதான் நீதி என்ற நிலை ஏற்படுமானால், நீதி என்பதற்கான அர்த்தமே மாறிவிடும்.

“ஒரு அமைப்பு என்ற வகையில், தற்போதுள்ள வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம், செலவு குறைந்த, விரைவான மற்றும் திருப்திகரமான தீர்வுகளை வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டும். இதற்காக புதிய வழிகளை உருவாக்குவதன் மூலம், மக்களுக்கு நீதி எளிதில் கிடைக்க நாம் உறுதியாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மேலும் பேசுகையில், நீதி அமைப்பில் உள்ள தாமதங்கள் வழக்குத் தொடுப்பவர்களுக்கு ஒரு தடையாகக் காணப்படுகின்றன. நீதித்துறை மற்றும் வழக்கு பற்றிய மாறிவரும் கருத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். வழக்கு முடிவதற்கு எடுக்கப்பட்ட கால அளவு ஒரு பெரிய தடையாகும் என்றார் போப்டே.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ரஞ்சன் கோகாய், ஓய்வு பெற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தின், 47வது, தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram